ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் கொல்கத்தா அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது, 21 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, சென்னை அணி வெற்றி பெறுவதற்கு முக்கியக் காரணமாக விளங்கினார்.
போட்டிக்கு பின்னர் பேசிய சென்னை அணியின் உதவி பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஸ்ரீதரன் ஸ்ரீராம், சேப்பாக்கம் ஆடுகளத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வது குறித்து சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் ஆல்ரவுண்டர் அகீல் ஹொசைன் ஆகியோர் நூர் அகமதுக்கு வழிகாட்டியதாகத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது ; நூர் மற்றும் அகில் ஆகியோர் நன்றாக உரையாடுகிறார்கள், அவர்களுக்குள் ஒரு நல்ல புரிதல் உள்ளது. நூர் அகமதுவுக்கு எந்த நீளத்தில் பந்து வீச வேண்டும் என்று அகீல் ஹொசைன் வழிகாட்டினார். என நான் நினைக்கிறேன். நூர் முதல் ஓவரில் சற்று குட்டையாகப் பந்து வீசினார், ஆனால் அவர் அந்த இடைப்பட்ட நீளத்தில் பந்து வீசத் தொடங்கியதும், அவரை எதிர்கொள்வது இயலாததாக இருந்தது.
அதே போல் கால் தசை காயத்தால் அவதிப்பட்டு வந்த தோனி கூட, நூர் அகமதுவிடம் நீண்ட நேரம் பேசினார். இன்னும் அதிகமாக லெக் பிரேக் பந்துகளை வீசுமாறு நூர் அகமதுவிடம் அவர் கேட்டுக்கொண்டார். அதன் பலன்களும் கண்கூடாகத் தெரிந்தன.







