சென்னையின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 25 சதவிகிதம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
கொரோனா 2ம் அலை தமிழகத்தில் தீவிரமாக பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் தினசரி ஏறக்குறைய 30,000 அளவில் கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. இதனைத் தடுப்பதற்காக ஜூன் 7ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், கொரோனாவை தடுப்பதில் முக்கிய ஆயுதமான தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேவையற்ற அச்சம் மற்றும் விழிப்புணர்வின்மை காரணமாக பலரும் முதலில் கொரோனா தடுப்பூசியை போடுவதில் தயக்கம் காட்டினர். விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட நிலையில், தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று மாநகராட்சி ஊழியர்கள் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
சென்னையில் தடுப்பூசி போடப்பட்டது தொடர்பான புள்ளிவிவரங்களை சென்னை மாநகராட்சி தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை முழுவதும் 22.12 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். சென்னையின் மொத்த மக்கள் தொகையான ஏறக்குறைய 80 லட்சம் பேரில் இது 25 சதவிகிதம் ஆகும். கடந்த 7-8 நாட்களில் சென்னையில் தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கை மிக அதிகமாகியுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி பரவலாக்கபட்டதுதான் இதற்கு காரணம். தமிழகத்தில் ஓரிரு தினங்களில் கொரோனா தடுப்பூசி இருப்பு தீர்ந்துவிடும் என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு அனுப்பிய பிறகு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.







