புதுச்சேரியில் கொரோனா பரவல் குறைந்தால் தளர்வுகளோடு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட ஏனாம் வெங்கடாசலபதி வீதியில் தடுப்பூசி திட்டத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
’தடுப்பூசி உங்கள் தெருக்களில்’ என்ற புதிய திட்டத்தின் அடிப்படையில் இன்று முதல், வீதிகளில் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் மருத்துவமனைகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்தத் தயக்கம் காட்டுவதால் அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று உரிய மருத்துவ வசதியுடன் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். போதிய அளவு தடுப்பூசி உள்ளது. இதே போல் தட்டுப்பாடு இன்றி தடுப்பூசி கிடைக்க அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்து வருகிறது. 4 நாட்களில் கொரோனா தாக்கம் குறைந்தால் மேற்கொண்டு கடைகள் திறந்திருக்கும் நேரத்தை அதிகரித்து தளர்வுகள் அளிக்கப்படும். மக்களுக்கு ரூ.3 ஆயிரம் நிவாரணமாக வழங்குவதற்கான கோப்பிற்கு எந்த தயக்கமும் இன்றி ஒப்புதல் அளிக்கப்படுள்ளது.
பொருளாதார அடிப்படையில் விரைந்து நிவாரணத் தொகையை முதலமைச்சர் வழங்குவார். இவ்வாறு தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.







