கொரோனா பாதிப்பு தொடர்பான புள்ளிவிவரங்களை வெளியிடுவது அவமானமல்ல என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் சார்பில் பதிலளிக்கப்பட்டது. “கொரோனா பாதித்து உயிரிழப்பவர்களின் உடல்கள் தனிமைப்படுத்தல் அறையில் இருந்து எடுக்கும் போதும், அடக்கம் அல்லது தகனம் செய்யும் முன் முகம் பார்க்க உறவினர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது” என தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தடுப்பூசி இருப்பு இன்னும் இரு நாட்களுக்கு மட்டுமே உள்ளதாகவும், போதுமான தடுப்பூசி மருந்துகளை சப்ளை செய்யக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், 3.5 கோடி டோஸ்கள் கொள்முதலுக்காக சர்வதேச டெண்டர் கோரப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்தது. மே 30ம் தேதி நிலவரப்படி, 45 வயதுக்கு மேற்பட்ட 75.73 லட்சம் பேருக்கும், 18 முதல் 44 வயது வரையிலான பிரிவினருக்கு 11.97 லட்சம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தது.
இதனைக் கேட்டுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, கொரோனா பாதித்தவர்கள், பலியானவர்கள் புள்ளி விவரங்களை வெளியிடுவது அவமானமல்ல என தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது. இருந்தாலும், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை குறைத்து காட்டியதாக குற்றச்சாட்டும் இல்லை என்றும் குறிப்பிட்டனர். வழக்கு விசாரணை ஜூன் 7ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.







