நாட்டிலேயே முதன்முறையாக உணர்வுகளுடன் கூடிய ரோபோவை உருவாக்கி சென்னையைச் சேர்ந்த பள்ளி மாணவர் அசத்தி உள்ளார்.
மனிதனின் உடல் உழைப்பை குறைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ரோபோக்கள், தற்போது ராணுவம், மருத்துவம் உள்ளிட்ட பொறுப்புமிக்க பணிகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது போன்ற பணிகளில் மனிதனின் கட்டளையை, சொன்னது சொன்னபடி செய்யும் ரோபோக்கள், இக்கட்டான நேரங்களில் சூழலை உணர்ந்து தானே முடிவெடுக்க முடியாதது பெரும் பின்னடைவுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இதை மையமாக வைத்தே ரஜினி நடித்த எந்திரன் பட முதல் பாகத்தை இயக்குநர் சங்கர் காட்சிப்படுத்தியிருந்தார். அந்த படத்தில் ரஜினி ரோபோவை உருவாக்குவது முதல் அதற்கு பயிற்சியளிப்பது, மனித உணர்வை அறியாத ரோபோவிற்கு அவற்றை உணர்த்துவது என்றே கதை அமைந்திருக்கும். ஒரு ரோபோவிற்கு உணர்ச்சிகள் இருந்தால் எப்படி இருக்கும் என்ற சோதனையை அடிப்படையாக கொண்ட படமாக எந்திரன் இருந்தது.
தற்போது அதனை மெய்ப்படுத்தும் விதமாக உணர்வுகளை கொண்ட ரோபோவை சென்னையை சேர்ந்த 13 வயது மாணவர் பிரதீக் கண்டுபித்துள்ளார். ரஃபி என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ரோபோவை திட்டினால், மன்னிப்பு கேட்கும் வரை பேசாமல் கோபத்துடன் இருக்கும் என்று பிரதீக் குறிப்பிட்டுள்ளார். நாம் வருத்தத்துடன் இருந்தால் அதை ரஃபி ரோபோ உணர்ந்து, அதேற்கேற்ப நடந்துக்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.







