சென்னையில் 2வது நாளாக இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்!

சென்னையில் இன்று 2வது நாளாக வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் கடந்த மாதம் (நவம்பர்) 4-ம் தேதி முதல் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) முடிவடைந்த நிலையில், நேற்று முன்தினம் (டிசம்பர் 19) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. இந்த பட்டியல் வெளியாவதற்கு முன்பு அக்டோபர் மாத நிலவரப்படி, 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்தனர். ஆனால், இந்த பட்டியலில் 5 கோடியே 45 லட்சத்து 76 ஆயிரத்து 756 வாக்காளர்கள் தான் இடம்பெற்றுள்ளனர். அதன்படி, சுமார் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதில், உயிரிழந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் உள்ளிட்டோர் அடங்குவர்.

தொடர்ந்து, வாக்காளர் சேர்க்கை, திருத்தம் மற்றும் மறுப்பு தொடர்பாக ஜனவரி மாதம் 18-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. பெயர் இல்லாதவர்கள், படிவம் 6-ஐ பூர்த்தி செய்து, அதற்கான உறுதிமொழி படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்த உறுதிமொழி படிவம் என்பது, சிறப்பு தீவிர பணிக்காக கொடுக்கப்பட்ட கணக்கெடுப்பு படிவம் போன்று தான் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், அதில் கடந்த 2002 மற்றும் 2005-ம் பட்டியலில் இடம் பெற்ற தங்களது பெயர் அல்லது பெற்றோர்கள் விவரங்களை பூர்த்தி செய்துதர வேண்டும் என சொல்லப்படுகிறது. இந்த படிவம் 6ஐ வாக்குச்சாவடி நிலை அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் நேரடியாக பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இதனை சம்பந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அலுவலகத்தில் உள்ள வாக்காளர் பதிவு அலுவலரிடமும் சமர்ப்பிக்கலாம் என கூறப்படுகிறது. https://voters.cci.gov.in என்ற இணையதளம் மூலமாக, தங்களுடைய பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை பார்த்துக்கொள்ளலாம்.
இதற்கிடையே, சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 2 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று சிறப்பு நடைபெற்ற நிலையில், 2வது நாளாக இன்றும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள், 18 வயதை பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.