பில்கிஸ்பானு வழக்கு-குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கும் குஜராத் அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை: கடந்த 2002ம் ஆண்டு நிகழ்ந்த குஜராத்…

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கும் குஜராத் அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை:

கடந்த 2002ம் ஆண்டு நிகழ்ந்த குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடுத்து ஏற்பட்ட வன்முறையின்போது, பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த வழக்கில் 11 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு:

15 ஆண்டுகள் சிறையில் இருந்த அவர்களை குஜராத் அரசு, சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை செய்தது.

குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஎம் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொத்ரா உள்பட 3 பேர் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.

உச்சநீதிமன்றம் விசாரணை:

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு, குற்றவாளிகளை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிடவில்லை என்றும், குற்றவாளிகள் விடுவிக்கப்பட்ட விவகாரம் சட்டப்படி நடைபெற்றதா என்பது குறித்து விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த வழக்கில் விடுவிக்கப்பட்ட குற்றவாளிகளும் ஒரு தரப்பாக கருதப்படுவார்கள் என தெரிவித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரம் குறித்து மத்திய அரசுக்கும், குஜராத் மாநில அரசுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை 2 வாரத்திற்கு நீதிபதிகள் தள்ளிவைத்துள்ளனர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த 15ம் தேதி விடுவிக்கப்பட்ட குற்றவாளிகள் கோத்ரா கிளைச் சிறையில் இருந்து வெளியே வந்தபோது, இனிப்புகள் வழங்கி வரவேற்கப்பட்டனர்.

பில்கிஸ் பானு வேதனை:

அவர்கள் விடுவிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள பில்கிஸ் பானு, தனது வாழ்க்கையை நாசம் செய்த குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகத் தெரிவித்துள்ளார். குஜராத் அரசு தனது முடிவை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சட்டத்தின் மீது தனக்கு நம்பிக்கை உள்ளது என்றும் நிச்சயம் தனக்க நீதி கிடைக்கும் என நம்புவதாகவும் பில்கிஸ் பானு தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதால் தனது எதிர்காலம் குறித்த அச்சம் அதிகரித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.