கர்நாடகத்தில் சாலை விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு

கர்நாடக மாநிலம், துமகுரு மாவட்டத்தில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம், துமகுரு மாவட்டம், சிரா அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது ஜீப்…

கர்நாடக மாநிலம், துமகுரு மாவட்டத்தில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம், துமகுரு மாவட்டம், சிரா அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது ஜீப் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 11 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள் அனைவரும் தினக் கூலித் தொழிலாளர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் பெங்களூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தவர்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராகுல் குமார் ஷாபூர்வாட் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

இதுகுறித்து, பிரதமர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ட்விட்டர் பதிவில், கர்நாடக மாநிலம், துமகுரு மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்து சம்பவம் இதயத்தை உலுக்குகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் பிரதமர் நிதியில் இருந்து வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் துமகுரு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், காயமடைந்தவர்களில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.