சென்னை புழல் மத்திய சிறையில் உள்ள கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக கைதிகள் தங்கள் அரும்பாடு பட்டு வளர்த்த வேர்க்கடலையை
அதிகாரிகளுடன் இணைந்து அறுவடை செய்து மகிழ்ந்தனர்.
சென்னையை அடுத்த புழலில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய சிறைச்சாலை உள்ளது. இங்கு பல்வேறு குற்றங்களில் தண்டனை பெற்று ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு அடைக்கப்பட்டுள்ள கைதிகளை அவர்களின் நன்னடத்தையின் அடிப்படையில் சிறைத்துறை அதிகாரிகள் பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
ஏற்கனவே சிறைத்துறையின் சார்பாக சிறைச்சாலை வளாகத்தில் முடி திருத்தும் நிலையம், உணவகம் உள்ளிட்ட பல்வேறு வகையான கடைகள் கைதிகளை கொண்டு அதிகாரிகளால் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிறை எண் இரண்டில் மூலிகை விவசாயம் செய்யப்பட்டு சாகுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது தோட்ட வளாகத்தில் கைதிகள் வேர்க்கடலையை வளர்த்து வந்தனர்.
இதனையடுத்து வேர்க்கடலையை அறுவடை செய்யும் பணியில் கைதிகளுடன் இணைந்து சிறைத்துறை அதிகாரிகளும் ஈடுபட்டனர். இதனை சிறைத்துறை துணைத்தலைவர் முருகேசன் மேற்பார்வையிட்டார். ஏதோ ஒரு கோபத்தில் தவறை செய்துவிட்டு தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகளுக்கு இது மறுவாழ்வு அளிக்க பெருமளவில் உதவும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
—வேந்தன்







