பழனி நில மோசடி வழக்கு – சிபிஐ-க்கு மாற்றக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேலும் ஒரு மனு…!

பழனி நில மோசடி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேலும் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பழனியைச் சேர்ந்த அறங்காவலர் அன்னபூரணி சிவக்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், பழனி மடத்திற்கு சொந்தமான நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு டோக்கன் வழங்க அனுமதி வழங்கிய அதிகாரி பதிவு நாளன்று விடுப்பில் சென்ற நிலையில், அலுவலக உதவியாளரும் விடுப்பில் இருந்துள்ளார்.

கொடைக்கானல் சார் பதிவாளர் ஆவண எண் ஒதுக்கி உள்ளார். இந்த விவகாரத்தில் அனைத்து அதிகாரிகள் மீதும் முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டி உள்ளது. எனவே, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான நில பத்திர பதிவு தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கௌரி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதே கோரிக்கையை முன்வைத்து இரு நீதிபதிகள் அமர்வு முன்பாக நிலுவையில் உள்ள வழக்கோடு சேர்த்து இந்த வழக்கையும் பட்டியலிட உத்தரவிடப்பட்டது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்கு நிலம் மோசடி செய்து பத்திரபதிவு செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிபிசிஐடி விசாரித்து வரும் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தனித்தனியே வழக்கு தொடுத்தனர். இந்த வழக்குகள் ஜூலை 30 ஆம் தேதி (நாளை) விசாரணைக்கு வர உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.