திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம் இன்று துவங்கியதை அடுத்து உற்சவ மூர்த்திகளுக்கு பொருத்தப்பட்டுள்ள தங்க கவசம்
அகற்றப்பட்டு, புதிய தங்கக்கவசம் நாளை மறுநாள் பொருத்தப்படும்.
வைஷ்ணவ ஆலயங்களில் ‘ஜேஷ்டாபிஷேகம்’ என்ற பெயரில், ஒவ்வொரு
ஆண்டும் 3 நாட்கள் சிறப்பு உற்சவம் நடைபெறுவது வழக்கம். அப்போது,
உற்சவ மூர்த்திகளுக்கு பொருத்தப்பட்டிருக்கும் பழைய கவசத்தை அகற்றி,
புதிய கவசம் பொருத்துவார்கள். இந்த நிகழ்ச்சிக்கு பெயர் தான்
ஜேஷ்டாபிஷேகம்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலை பொருத்தவரை, ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப
சுவாமிக்கு தினமும் கல்யாண உற்சவம், டோலோற்சவம, வசந்த உற்சவம் மற்றும் சகஸ்ர
தீப அலங்கார சேவை ஆகிய சேவைகள் நடத்தப்படுகின்றன. மேலும், உற்சவ மூர்த்திகள்
தினமும் கோவில் மாட வீதிகளில் வலம் வருகின்றனர். தொடர்ந்து, விசேஷ நாட்களில்
உற்சவ மூர்த்திகளுக்கு திருமஞ்சன அபிஷேகம் நடத்தப்படுகிறது.
இதன் காரணமாக, உற்சவ மூர்த்திகளின் மீது பொருத்தி இருக்கும் தங்க கவசம்
தேய்மானம் அடைகிறது. இதனை அப்படியே விட்டு விட்டால், கவசத்தின் உள்ளிருக்கும்
பஞ்சலோக மூர்த்திக்கு சேதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, ஒவ்வொரு ஆண்டும்
உற்சவ மூர்த்திகளின் மீது பொருத்தப்பட்டிருக்கும் தங்க கவசத்தை அகற்றி, புதிய தங்க
கவசம் பொருத்தும் பணி நடைபெறும்.
இந்த நிகழ்ச்சி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் 3 நாட்கள்
நடைபெறுகிறது. இந்த ஆண்டு ஜேஷ்டாபிஷேகம் இன்று துவங்கியது. இதனை
முன்னிட்டு, உற்சவ மூர்த்திகளுக்கு கடந்த ஆண்டு பொருத்தப்பட்ட தங்க கவசம்
அகற்றப்பட்டது. தொடர்ந்து, உற்சவர்களுக்கு வைர கவசம் அணிவிக்கப்பட்டு,
சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மேலும், நாளை வைர கவசத்தை அகற்றி முத்து கவசம் பொருத்துவார்கள்.
பின்னர், நாளை மறு நாள் புதிய தங்க கவசம் உற்சவ மூர்த்திகளுக்கு
பொருத்தப்படும். அடுத்த ஆண்டு ஜேஷ்டாபிஷேகம் வரை நாளை மறுநாள்
பொருத்தப்படும் தங்க கவசத்துடன் உற்சவர்கள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.
—-கு. பாலமுருகன்







