சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கட்சியின் தலைவராக அன்புமணி மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் அந்த கட்சியின் பொதுச்செயலாளராக வடிவேல் இராவணனும், பொருளாளராக திலகபாமாவும் தேர்வு செய்யப்பட்டனர். இராமதாஸ் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில் அவர் உடன் இணைந்து செயல்பட்டு வந்த பேராசிரியர் தீரன், பு.த.அருள்மொழி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அனைவரும் அன்புமணி முன்னிலையில் இணைந்து இந்த பொதுக் குழுவில் பங்கேற்றனர்.
தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது :
மருத்துவர் அய்யா இந்த பொது குழுவில் இல்லை என்ற ஒரு வருத்தம் இருக்கிறது. அவர் இங்கே இல்லை என்றாலும் அவரது மனம் இங்கே தான் இருக்கும். அவரின் வாழ்த்துக்களும் நமக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது அதன் பிறகு இந்த ஆண்டுதான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்குக் காரணம் டாக்டர் ஐயா அவர்களும், பாட்டாளி மக்கள் கட்சியும். சமூக நீதி கணக்கெடுப்பை நடத்தினால் அனைத்து விதத்திலும் தமிழ்நாடு முன்னேறும்.
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கொடுத்திருக்கக்கூடிய பதில் என்பது தமிழ்நாட்டிற்கான துரோகம். கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி தற்போது ஆளுங்கட்சியாக இருக்கிறது மீண்டும் அங்கு ஆட்சிக்கு வரவேண்டும் என காங்கிரஸ் கட்சி எண்ணுகிறது.
பாமக தனியாக நின்று எத்தனையோ சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்று இருக்கிறோம். காங்கிரஸ் கட்சியால் தனியாக நின்று ஒரு கவுன்சிலர் கூட வெற்றி பெற முடியாது.
மேகதாது அணை விவகாரத்தில் பிஜேபி காங்கிரஸ் என்று எந்த வேறுபாடும் இல்லாமல் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களுக்கு இடையிலே ஈகோ இருக்கிறது. தமிழக முதலமைச்சர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். தமிழ்நாட்டின் சட்டமன்ற கட்சியின் தலைவர்களை,நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு பிரதமரை பார்க்க செல்லுங்கள்.
நீட் தேர்வை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது.
வருகின்ற அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி அன்று மதுவிலக்கை வலியுறுத்தி சௌமியா அன்புமணி தலைமையில் தமிழ்நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறோம். ஆந்திராவில் உள்ள மக்கள் அங்கு பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட வேண்டும் என்று அவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள். கடந்த மூன்று மாதமாக வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.




