முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் மற்றும் உலகெங்கும் உள்ள முருகன் கோயில்களில் இன்று வைகாசி விசாகவிழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
தமிழ் கடவுள் என்று போற்றப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம்
படைவீடாகவும் ஓம் எனும் பிரணவ மந்திரத்தை தந்தைக்கு உபதேசம் செய்ததால் தகப்பன்
சாமி என்று அழைக்கப்படும் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோவில் வைகாசி விசாகத்தினையொட்டி காலை நடை திறக்கப்பட்டு மூலவர் சுவாமிநாத சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது .இதனைத் தொடர்ந்து தங்கக் கவசம் வைரவேல் சத்தப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார் . ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
முருகனின் ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வைகாசி விசாக உற்சவம் இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முருகப் பெருமான் அவதரித்த, வைகாசி விசாக நட்சத்திரத்தன்று முருகப் பெருமானை வழிபட்டால், ஆண்டுமுழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதிகம். இதனால், ஆயிரக்கணக்கான பக்தர்கள், காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாத யாத்திரையாக கோயிலுக்கு வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் பறவை காவடி , இளநீர்காவடி . புஷ்பகாவடி, பன்னீர் காவடி ஆகியவை எடுத்து வந்து “ அரோகரா ” கோஷம் முழங்கிட முருகபெருமானை தரிசித்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால், மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. மேலும் விழாவையொட்டி திருப்பரங்குன்றம் பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்ததுடன், காவல்துறை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு இருந்தது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்குள் இரண்டாம் படை வீடான, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. முருகப் பெருமான் அவதரித்த, வைகாசி விசாக நட்சத்திரத்தன்று முருகப் பெருமானை வழிபட்டால், ஆண்டுமுழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதிகம். இதனால், ஆயிரக்கணக்கான பக்தர்கள், காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாத யாத்திரையாக கோயிலுக்கு வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் ஆறு மணி நேரம் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால், திருச்செந்தூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சிவகாமி உடனாய திருத்தளிநாதர் கோயிலில், வைகாசி விசாகத் திருவிழா மே 24ம் தேதி முதல், சிறப்பாக நடைபெற்றது. .வையொட்டி ஒன்பதாம் நாள் திருவிழாவில் தேரோட்டம் நடைபெற்றது. முதல் தேரில் விநாயகப் பெருமானும், இரண்டாவது தேரில் பிரியாவிடைய அம்மனுடன் சோமாஸ்கந்தரும், மூன்றாவது தேரில் சிவகாமி அம்மனும் எழுந்தருளினர். தேரோட்டங்களைக் குன்றக்குடி ஆதினம் பொன்னம்பல அடிகளார் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரின் வடம்பிடித்து இழுத்தனர்.
நெல்லை மாவட்டம், வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், மிகவும் தொன்மையான குடைவரைக் கோயிலாகும். இங்கு முருகப் பெருமானின் ஜென்ம நட்சத்திரமான விசாகத்தன்று, ஆண்டுதோறும் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு, அதிகாலையில் சிறப்பு அலங்காரத்துடன் சுப்பிரமணிய சுவாமிக்குப் பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர், பால்குடம் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பிறகு, அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குறிப்பாக, சிறுமிகள், பெண்கள் பால்குடம் சுமந்தும், காவடி எடுத்தும் ஊர்வலம் வந்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ‘முருகனுக்கு அரோகரா’ என்று முழங்கி சுவாமியை வழிபட்டனர்.
- பி.ஜேம்ஸ் லிசா










