சென்னயில் விடிய விடிய தார் சாலை போடும் பணி அண்ணாநகர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இப்பணியை சென்னை மேயர் பிரியா ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை அண்ணாநகரில் நடைபெற்று வரும் இரவு நேர தார் சாலை போடும் பணியை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்ததாவது..
” சென்னை மாநகரம் முழுவதும் மழைநீர் வடிகால் பணிகள் காரணமாக சேதமடைந்த சாலைகள் முதலமைச்சர் உத்தரவின் பேரில் சீரமைக்கப்பட்டு வருகின்றன. இந்த சாலைகள் முறையாக போடப்படுகிறதா, வெப்பநிலை, பிட்மென், சாலையின் தடிமன் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
சென்னை மாநகராட்சி மூலமாக 1,157 சாலைகள் ரூ.124 கோடி மதிப்பீட்டில் போடப்பட உள்ளன. 632 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 80 கோடி மதிபீட்டில் சாலைப் பணிகள் தற்போது நடைப்பெற்று வருகின்றன. சிங்கார சென்னை திட்டம் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பி.ஆர்.ஆர் கீழ் 26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 26 சாலைகள் அமைக்கும் பணிகள் நடைப்பெற்று வருகிறது. இதில் 3 பணிகள் முடிவு பெற்றுள்ளன. 7 பணிகள் நடைப்பெற்று வருகின்றன. 18 பணிகள் நடைபெற உள்ளன. உட்புறச்சாலைகளும் சீரமைக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டைவிட இந்தாண்டு பனி அதிகமாக உள்ளது. ஜனவரி மாதத்தில் பனிப்பொழிவு குறையத் தொடங்கிவிடும் ஆனால் இந்தாண்டு மார்ச் வரை பனிப்பொழிவு இருந்தது. பனியின் காரணமாகதான் கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது. சென்னை மாநகராட்சி சார்பாக காலை, மாலை என இரண்டு முறை கொசுப்புகை அடிக்கப்பட்டு வருகிறது.
ஒரே சாலையில் இரண்டு முறையும், வீடு, வீடாக சென்றும் புகை அடிக்கப்பட்டு வருகிறது. கால்வாய் பகுதிகளில் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தும் பொருட்டு டிரோன் மூலமாகவும், படகுகள் மூலமாகவும் கொசு மருந்து தெளித்து வருகிறோம். கடந்த மாதத்தைவிட இந்தமாதம் கொசு குறைவாகத்தான் உள்ளது. அதிகமாக இல்லை.
சென்னை, மாநகராட்சி சார்பாக கட்டப்படும் கழிவறைகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. ஏதேனும் சீரமைப்பு பணிகள் காரணமாக கழிப்பிடங்கள் பூட்டி வைக்கப்பட்டிருக்கலாம். மண்டலம் 5,6 மற்றும் 9 களில் கழிப்பிடங்களை சீரமைக்கும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒவ்வொரு பகுதிகளிலும் தனியாரிடம் இணைந்து சீரமைக்கப்படும்.கழிப்பிடங்கள் திறந்து வைக்கும் நேரம் குறித்து தனியாருக்கு முறையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது” என மேயர் பிரியா தெரிவித்தார்.
– யாழன்







