மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலை திட்டம்

சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் உருவாக உள்ளது, சென்னை மதுரவாயல் – துறைமுகம் இடையிலான ஈரடுக்கு பறக்கும் சாலை திட்டம். இந்தியாவில் உள்ள தொழில் நகரங்களில் முதன்மையானது தமிழ்நாட்டின்…

சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் உருவாக உள்ளது, சென்னை மதுரவாயல் – துறைமுகம் இடையிலான ஈரடுக்கு பறக்கும் சாலை திட்டம்.

இந்தியாவில் உள்ள தொழில் நகரங்களில் முதன்மையானது தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை. கார் உள்ளிட்ட வாகனங்கள், அதன் உதிரி பாகங்கள் என பல்வேறு பொருட்களைத் தயாரிக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் தொழிற்சாலைகள், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பொருட்கள் அனைத்தும் ஏற்றுமதி செய்வதற்காகச் சென்னை துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. சென்னை மாநகர எல்லைக்குள் இரவு 10 மணிக்கு மேல்தான் லாரிகள் அனுமதிக்கப்படும் நிலையில், அந்த பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் பகல் நேரங்களில் பல கிலோமீட்டர் சுற்றிச்செல்லும் சூழல் நிலவுகிறது. இதற்குத் தீர்வு காணும் வகையில் 2006-ம் ஆண்டு அப்போதை முதலமைச்சர் கருணாநிதி, மதுரவாயல் முதல் துறைமுகம் வரை பறக்கும் சாலை அமைக்கப்படும் என அறிவித்தார்.

அப்போதை பிரதமர் மன்மோகன் சிங்கால் இந்த பறக்கும் சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கின. அதன்பின் 2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த திட்டம் முழுமையாக கைவிடப்பட்டது. ஆற்றங்கரையில் தூண்கள் அமைக்கப்படுவதால், மழைநீர் செல்ல இடையூறு ஏற்படும் என்ற காரணமும் அப்போது சொல்லப்பட்டது. அப்போது கைவிடப்பட்ட இத்திட்டம், இப்போது மீண்டும் உயிர்த்தெழ தொடங்கி ஈரடுக்கு பறக்கும் சாலை திட்டமாக உருவெடுத்துள்ளது.

மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் 20. 6 கிலோ மீட்டர் தூரத்தில் அமையவுள்ளது. இதில் கோயம்பேடு முதல் நேப்பியார் பாலம் வரை ஈரடுக்கு மேம்பாலமாகக் கட்டப்படவுள்ளது. முதல் அடுக்கில் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், பேருந்துகள் செல்லலாம். இரண்டாவது அடுக்கில் மதுரவாயலிலிருந்து துறைமுகம் வரை லாரிகள் எங்கும் நிற்காமல் செல்லும் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது. நீர் வழித்தட கரையோரங்களில் தூண்கள் அகற்றப்பட்டு, புதிய தூண்கள் அமைக்கப்படவுள்ளன. நடப்பு பட்ஜெட்டில் இத்திட்டத்திற்காக சுமார் 6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதன் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்தை 30 மாதங்களுக்குள் முழுமையாக முடிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் தமிழ்நாடு அரசும் திட்டமிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.