பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங் கடிதம்!

கொரோனா வைரஸை எதிர்கொள்ளவும், தடுப்பூசி பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பாகவும், 5 யோசனைகளை தெரிவித்து பிரதமர் மோடிக்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார். அடுத்த 6 மாதங்களில் தடுப்பு மருந்து உற்பத்திக்காக அனுமதி…

கொரோனா வைரஸை எதிர்கொள்ளவும், தடுப்பூசி பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பாகவும், 5 யோசனைகளை தெரிவித்து பிரதமர் மோடிக்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

அடுத்த 6 மாதங்களில் தடுப்பு மருந்து உற்பத்திக்காக அனுமதி கொடுக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் விநியோகிக்க உரிமம் பெற்ற நிறுவனங்கள் குறித்து அரசு அறிவிக்க வேண்டும் என மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பிட்ட காலத்திற்குள் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்தால், அதற்கு முன்னதாக தேவையான அளவு தடுப்பு மருந்து கொள்முதல் செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பு மருந்துகளை அவசர காலத்தில் விநியோகம் செய்வதற்கு 10 சதவீத மருந்துகளை மத்திய அரசு தன் வசம் வைத்திருக்கவும், மற்றவற்றை மாநில அரசுகள் பயன்படுத்தி கொள்ளவும், தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். முன்கள பணியாளர்கள் யார் என்பதை வரையறுக்கவும். அவர்கள் 45 வயதுக்கு கீழ் இருந்தாலும் தடுப்பூசி போடுவதற்கும் மாநில அரசுகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள மன்மோகன் சிங், பள்ளி ஆசிரியர்கள், பேருந்து மற்றும் டாக்சி டிரைவர்கள், நகராட்சி, பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க அனுமதி வழங்கலாம் என்றும் கூறியுள்ளார்.

தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனங்கள், உற்பத்தியை விரைவாக அதிகரிக்கவும் தேவையான நிதி மற்றும் சலுகைகளை வழங்க வேண்டும் என்றும், சட்டத்தில் உள்ள கட்டாய லைசென்ஸ் முறையை அமல்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். ஐரோப்பிய மருத்துவ அமைப்பு அல்லது அமெரிக்க மருத்துவ அமைப்பு ஒப்புதல் வழங்கிய மருந்துகளை, நமது நாட்டில் எந்தவித தடையும் இல்லாமல் இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடித்ததில் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.