மதுரவாயல் – துறைமுகம் இடையேயான ஈரடுக்கு பறக்கும் சாலை திட்டம் 30 மாதங்களில் நிறைவடையும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை தியாகராய நகரில் பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் சென்னை மண்டல அதிகாரி சோமசேகர், சென்னைத் துறைமுக பொறுப்புக்கழகத் தலைவர் சுனில் பாலிவால், தொழிற்துறை செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் சென்னை மண்டல அதிகாரி சோமசேகர், மதுரவாயல் – துறைமுகம் இடையே 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு 5,855 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ள பறக்கும் சாலை திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். விரைவில் தமிழ்நாடு அரசு, சென்னை துறைமுகம், கடற்படை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு பணிகள் தொடங்கும் என்றும் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னைத் துறைமுக பொறுப்புக்கழக தலைவர் சுனில் பாலிவால், சென்னைத் துறைமுகம் மற்றும் காமராஜர் துறைமுகத்தை மேலும் விரிவாக்கம் செய்ய வாய்ப்பில்லை என்று கூறினார். இரண்டு துறைமுகங்களிலும் சரக்குகளை கையாள கூடுதல் குடோன் வசதி ஏற்படுத்துவது உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.








