பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் இழிவாக பதிவிட்டதாக பதிவான வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் காவல்துறை விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக ஆளுனராக பன்வாரிலால் புரோஹித் இருந்தபோது, பெண் பத்திரிகையாளர் ஒருவர் அவமதிக்கப்பட்டது தொடர்பாக ஆளுநர் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பெண் பத்திரிகையாளர்கள் பற்றி சமூக வலைதளங்களில் நடிகர் எஸ்.வி.சேகர் பகிர்ந்த தகவல், குறித்து புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து எஸ்.வி.சேகர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. சமூக வலைதளத்தில் பதிவிட்டது தொடர்பாக நடிகர் எஸ்வி சேகர் மன்னிப்பு கேட்டதாகவும், நீதிமன்றத்தில் மற்றொரு முறை மன்னிப்பு கேட்கவும் தயாராக இருப்பதாவும் அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக எஸ்.வி.சேகர் ஒருமுறை கூட விசாரணைக்கு ஆஜராகவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அண்மைச் செய்தி: இன்னுயிர் காப்போம் திட்டம்: காப்பாற்றப்பட்ட 33 உயிர்கள்
இதனையடுத்து ஏப்ரல் 2-ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன்பாக விசாரணைக்கு நடிகர் எஸ்.வி.சேகர் ஆஜராக வேண்டுமென நிதிபதி உத்தரவிட்டார். பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி ஃபேஸ்புக்கில் எழுதிய நபர் குறித்த தகவல்களை தெரிவிக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு தள்ளிவைத்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







