இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ், இதுவரை 33 ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
விபத்துகளில் சிக்கியவர்களின் உயிரை காப்பாற்றிய தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களை கவுரவிக்கும் வகையில், அலர்ட் தன்னார்வ அமைப்பு சார்பில் விருதுகள் வழங்கும் விழா, சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், மன்னார்குடி செவிலியர் வனஜா மற்றும் சென்னை பெண் காவலர் ராஜேஸ்வரி உள்ளிட்ட 15 பேருக்கு விருதுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் இதுவரை 56 லட்சத்து 26 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளதாகவும், அந்த திட்டம் மூலம் ஒரு கோடி பேருக்கு மருத்துவம் கொடுக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் தெரிவித்தார். இன்னுயிர் காப்போம் திட்டத்திற்காக இதுவரை 30 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 33 ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.







