தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நிரப்பப்படாமல் இருந்த நிபுணத்துவ உறுப்பினர்கள் பணியிடங்களுக்கு ஓய்வுபெற்ற தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், ஓய்வுபெற்ற வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த இந்திய வனத்துறை அதிகாரி அருண்குமார் வர்மா ஆகியோரை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
கிரிஜா வைத்தியநாதனுக்கு சுற்றுச்சூழலில் போதிய அனுபவம் இல்லை எனக் கூறி பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், கிரிஜா வைத்தியநாதன் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அமர்வு குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளதாகக் கூறி கிரிஜா வைத்தியநாதன் நியமனத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. வழக்கு குறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை, மத்திய பணியாளர் துறை, கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 16ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.







