முக்கியச் செய்திகள் சினிமா

ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிக்கும் கர்ணன்!

நடிகர் தனுஷ் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படம் இன்று திரையரங்களில் வெளியாகி இருக்கிறது.

கதை சுருக்கம்:

தனது ஊருக்கு ஒரு பேருந்து நிறுத்தத்தை கொண்டு வர வேண்டும் என்றும், பல தலைமுறைகளாக ஒடுக்கப்பட்டு வரும் தனது சமூகத்திற்கு முன்னேற்றமும் சமூக அங்கீகரமும் கிடைக்க கதாநாயகன் என்ன செய்கிறான் என்பதுதான் கர்ணன் திரைப்படத்தின் கதைச்சுருக்கம்.

இயக்குநர் மாரி செல்வராஜின் இரண்டாவது திரைப்படமாக வெளியாகி இருக்கும் கர்ணன், பட்டியலின மக்கள் சந்திக்கும் தீண்டாமை, அதிகார வர்கத்தினர் கட் அவிழ்த்துவிடும் வன்முறை போன்ற முக்கிய சமூகப் பிரச்சனைகளை கதையின் கருவாகக் கொண்டுள்ளது. படத்தின் முதல் காட்சியே மரணம், ஒப்பாரி பாடலில்தான் தொடங்கிறது. பரியேறும் பெருமாள் படத்தில் எப்படி கருப்பியின் (நாய்) மரணத்தில் படம் தொடங்குமோ, அதுபோல இத்திரைப்படத்தில் கர்ணன் ( தனுஷ்) தங்கையின் மரணத்தில் படம் தொடங்குகிறது.

கர்ணன் வசிக்கும் ஊரில் சரியான நேரத்தில் பேருந்து நின்றிருந்தால் இந்த மரணம் நிகழ்ந்திருக்காது, என்ற கர்ணன் தாயின் கதறல் பார்வையாளர்களை யோசிக்க வைக்கிறது.

இத்திரைப்படத்தின் மையக்கதை பொடியன்குளம் என்ற கிராமத்தில்தான் நிகழ்கிறது. பொடியன்குளம் கிராமத்தில் பட்டியலின மக்கள் வாழ்கின்றனர். ஊரில் இருக்கும் ஒரு பகுதி மக்கள், எல்லா ஒடுக்குமுறைகளையும் சகித்துக் கொண்டு வாழ்கிறார்கள். ஆனால் கர்ணன் மற்றும் அவரது உறவினராக இருக்கும் நடிகர் லால் இதற்கு ஒரு முடிவு ஏற்பட வேண்டும் என்று நினைக்கும் மனிதர்களா இருக்கிறார்கள்.
பெடியன்குளத்தில், பேருந்து நிலையம் இல்லாததால், இடைநிலை சாதியினர் வசிக்கும் ஊரான மேலூருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் இரு ஊர்களுக்கு தகராறு ஏற்படுகிறது. கல்லூரி செல்வதற்காக நடிகை கெளரி கிஷன் மேலூர் பேருந்து நிலையத்திற்கு செல்லும்போது அவரை தவறாக கேலி செய்யும் காட்சி, சமூக எதார்த்தத்தை தோல் உரிக்கும் விதமாக அமைந்துள்ளது.

பட்டியலின சமூகத்தை சேர்ந்த பெண்கள் கல்வி நிலையங்களில் கேலி செய்ப்படுவதும், பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதும் அன்றாட நாம் கடந்து போகும் செய்தியாக இருக்கிறது. இந்த சம்பவங்களை நேர்த்தியாக தனது கதையில் மாரி செல்வராஜ் இணைத்திருப்பதற்கு அவரை நாம் பாராட்டி ஆக வேண்டும்.

ஒரு பேருந்து நிறுத்தம் ஏன் வேண்டும்? பேருந்து அந்த ஊருக்கு வருவதால் அப்படி என்ன ஆகப்போகிறது? ஏன் அந்த ஊரில் மட்டும் பேருந்துகள் நிறுத்தப்படுவதில்லை. என்ற பல முக்கிய கேள்விகளுக்கு இத்திரைப்படம் ஒரு சிறந்த பதிலாக அமையும். தனுஷ் படத்தில் கூறும் வசனம் மிகவும் முக்கியத்துவம் வாய்ததாக இருக்கிறது’ (பேருந்து வந்து இங்க இருந்து நாங்க தப்பிச்சி போயி வளர்ந்திடக் கூடாதுதான் இப்படி செய்யுறாங்க’).மேலூரில் இருக்கும் ஊர் பெரியவர், பெடியன்குளம் மக்கள் அழிய வேண்டும் என்று நினைப்பதும். அவர்கள் அழிவதை கண்டு சரி என்று கூறுவதும். இச்சமூகத்தின் சாதிய வன்ம மனநிலையை சித்தரிக்கும் விதமாக இருக்கிறது.தொடர்ந்து ஒடுக்குதலை சந்திக்கும் கர்ணன் ஒரு கட்டத்தில் தனியார் பேருந்தை அடித்து நொறுக்குவார். இந்த வழக்கை விசாரிக்க வரும் காவல்துறை அதிகாரியாக நடராஜன் சுப்பிரமணியம் நடித்திருக்கிறார். விசாரணையின்போது அவர் பேசும் வசனங்கள் முக்கியத்துவம் வாய்ததாக இருக்கிறது ‘ மாட சாமியின் மகனுக்கு பேரு துரியோதனன்னா? . நடுவுல மன்னர் பேரு வச்ச நீங்க மன்னர் பரம்பரை ஆயிடுவீங்களாடா.’ மேலும் ஊர் பெரியவராக நடிக்கும் ஜி எம் குமார் கூறும் வசனங்களும் முக்கியத்துவம் வாய்ந்தது ‘ பேருந்தை உடைத்ததற்காக அவர்கள் அடிக்கவில்லை.

நமது பெயருக்காக , தலைப்பாகை கட்டினதுக்காக, நிமிர்ந்து பார்ப்பதற்காகத்தான் அடிக்கிறார்கள்’ என்பார்.திருமண விழாக்களில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் நாற்காலியில் அமர்ந்ததற்காக தாக்கப்பட்ட சம்பவத்தை நாம் அனைவருமே செய்திகளாக கடந்திருக்கிறோம். பட்டியலின மக்களுக்கு மறுக்கப்படும் சமூக அங்கீகாரத்தை தனது வசனங்கள் மூலம் மாரிசெல்வராஜ் வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறார். மாரிசெல்வராஜின் கதை சொல்லும் பாணியில், குறியீடுகளுக்கு ஒரு முக்கிய இடம் இருக்கும். இந்த படத்தில் காட்டுப் பேச்சியின் முகம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கர்ணனின் தங்கை மரணித்த பிறகு அவரது முகம் காட்டுப்பேச்சியாக மாறிவிடும். படம், முழுவதும் இந்த குறியீடு பயன்படுத்தப்பட்டிருக்கும்.

இதுபோல மின்கம்பத்தில் அமர்ந்திருக்கும் காகங்கள், கழுதையின் முன் கால்கள் கயிற்றால் கட்டப்பட்டிருப்பது, தலையில்லாத சிலை, தலையில்லாத ஓவியம்,படத்தின் ஒவ்வொரு காட்சி அமைப்புக்கும் இயக்குநரும், அவரது குழுவும் அதீத உழைப்பை செலுத்தி இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் தேனிஷ்வரின் ஒளிப்பதிவு படத்தின் முக்கிய பலம். ஒரு நிலப்பரப்பை, அதன் மனிதர்களை, இயற்கையை, கதைக்கு ஏற்றவாறு காட்சிப்படுத்தியிருக்கிறார். அதுபோல் படத்தின் இசையமைப்பளர் சந்தோஷ் நாராயணின் இசை நம்மை அந்த கிராமத்திற்கே எடுத்துச் செல்கிறது. ஏற்கனவே பாடல்கள் டிரெண்டாகிவிட்டது. அந்த பாடலுக்கான காட்சிகள், இசைக்கு மேலும் பலம் சேர்க்கிறது.

ஒரு பாடல் படத்தில் எப்போது வர வேண்டும் என்பதை இயக்குநர் சரியாக தெரிந்து காட்சிகளை அமைத்துள்ளார். மேலும் படத்தின் எடிட்டர் செல்வா ஆர்.கெ- வின் எடிட்டிங்கும் அட்டகாசமாக இருக்கிறது. பார்வையாளர்களுக்கு எந்த நெருடலும் இல்லாமல், படத்தின் கதையோட்டத்திற்கு ஏற்றவாறு எடிட்டிங் செய்திருக்கிறார்.

படத்தின் கதாநாயகன் தனுஷுன் நடிப்பை பாராட்டாமல் கடந்து செல்ல முடியாது . இரண்டாவது முறையாக தேசிய விருது பெற்றிருக்கும் தனுஷுக்கு இந்த படத்திற்கும் தேசிய விருது நிச்சயமாக கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. பிரபல மலையாள நடிகர் லால், தனது எதார்த்தமான நடிப்பில் அசத்தியிருக்கிறார். கதாநாயகி ரஜிஷா விஜயனும் மிக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கெளரி கிஷனன் துணை கதாபாத்திரம் என்றாலும், அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்திருக்கிறார். பரியேறு பெருமாள் படத்தில் தலைமை ஆசிரியராக வரும் நடிகர் பூ ராம், கரணனின் அக்காவாக வரும் நடிக்கும் லஷ்மி ப்ரியா, பொடியன்குளத்தின் ஊர் பெரியவராக நடிக்கும் ஜி.எம், குமார் ஆகியோரின் இயல்பான நடிப்பு கதையை ஒரு சிறப்பான படைப்பாக மாற்றியிருக்கிறது.

இத்திரைப்படம் தமிழ் சினிமாவிற்கு, ஒரு எழுத்தாளர் ஏன் வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. ஆழ்ந்த சமூக புரிதலும், நிலத்தின் நிஜமான கதையையும், இந்த சமூகத்தின் எதார்த்த சிக்கலை கதையாக அமைக்க மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் தமிழ் சினிமாவிற்கு நிச்சயம் தேவை. நடிகர் தனுஷைப் போல மற்ற நட்சத்திர கதாநயகர்களும் மக்களுக்கான படத்தில் நடிக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. ரசிகர்களை ரசிக மனநிலையில் தக்க வைத்துக்கொள்ள மாரி செல்வராஜ் முயற்சிக்காமல், கமர்ஷியல் மாயங்களில் இருந்து ரசிகைகளை மடைமாற்ற முயற்சித்திருக்கிறார்.

இத்திரைப்படம் நமது சமூகத்தின் கண்ணாடிபோல, மிகவும் எதார்த்தமாக இருக்கிறது. ஒரு சமூகத்தை காப்பற்ற ஒரு கதாநாயகன் வர வேண்டும் என்ற மனநிலையை இத்திரைப்படமும் விதைக்கிறது. நாயகன் வழிபாட்டை இத்திரைப்படமும் கையில் எடுத்திருக்கிறது. இதை தவிர்க்காமல் திரைப்படம் எடுப்பது கடினம் என்பது நமக்கு தெரிந்திருந்தாலும், அடுத்த படத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் இந்த சிறு தவறையும் செய்யமாட்டார் என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.

சமூக அங்கீகாரம்தான் ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான விடுதலை என்பதே கர்ணன் உரக்க பேசும் உண்மை

-ஆர்.வாசுகி

Advertisement:

Related posts

கைகள் இல்லை, எனினும் நடனத்தால் உலகை ஈர்த்த சிறுமி!

Jayapriya

கொரோனா பலி எண்ணிக்கை 1,53,847 ஆக அதிகரிப்பு!

Niruban Chakkaaravarthi

3 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு

Jeba