திமுக அரசின் மெத்தனப்போக்கின் காரணமாக சென்னை மழையால் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் கோடம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பழனிசாமி, சென்னை மாநகரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது, திமுக அரசு சரியான முறையில் திட்டமிடாத காரணத்தால் சாலைகளில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. அதிமுக ஆட்சியின்போது மழை துவங்குவதற்கு முன்பே திட்டமிட்டு தண்ணீர் தேங்கும் இடங்களை ஆராய்ந்து முன்னேற்பாடுகள் செய்யப்பட்டது. வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் அறிவித்திருந்தாலும், திமுக அரசின் மெத்தனப் போக்கின் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு முன்னேற்பாடுகள் செய்யாத காரணத்தால் சென்னை மாநகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட பழனிசாமி, இனியாவது அரசு விழிப்புணர்வுடன் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கனமழை அதிகளவில் இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், அடிப்படைத் தேவையான பொருட்களை உடனடியாக வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.







