’அப்போ செய்த சபதம்…’ சாதித்த பழ வியாபாரிக்கு பத்மஸ்ரீ விருது!

தான் செய்த சபதத்தை கடும் முயற்சிகளுக்குப் பிறகு நிறைவேற்றி, பெருமை சேர்ந்த ஆரஞ்சு பழ வியாபாரிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டு இருக்கிறது. கலை, சமூகப் பணி, அறிவியல், வர்த்தகம், தொழில், மருத்துவம், இலக்கியம் உள்பட…

தான் செய்த சபதத்தை கடும் முயற்சிகளுக்குப் பிறகு நிறைவேற்றி, பெருமை சேர்ந்த ஆரஞ்சு பழ வியாபாரிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டு இருக்கிறது.

கலை, சமூகப் பணி, அறிவியல், வர்த்தகம், தொழில், மருத்துவம், இலக்கியம் உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகள் ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகள் இன்று வழங்கப்பட்டன. இரண்டு கட்டமாக வழங்கப்பட்ட இந்த விருதுகள், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் வழங்கப்பட்டன.

குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார். மறைந்த ஜார்ஜ் பெர்னாண்டஸுக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. இந்த விருது விழாவில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர், மங்களூர் அருகிலுள்ள நியூபடப்பு என்ற கிராமத்தைச் சேர்ந்த ஹரேகலா ஹஜப்பா (Harekala Hajabba).

68 வயதான ஹஜப்பா, ஆரஞ்சு பழம் விற்று வருகிறார் மங்களூரில். கூடையில் பழங்களை வைத்துக்கொண்டு சாலைகளில் நிற்கும் வாகங்களில் விற்பதை வழக்கமாக வைத்திருக் கிறார். ஒருநாள் வழக்கம் போல பழம் விற்றுக்கொண்டிருந்தபோது, வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர், ’ஆரஞ்சு பழம் என்ன விலை?’ என்று ஆங்கிலத்தில் கேட்டார். அவருக்குப்  பதில் சொல்ல முடியவில்லை. இதனால் அவமானமாக இருந்தது.

பள்ளிக்கு செல்லாததால்தான் இந்த அவமானம் என்று நினைத்தார். அதோடு அவர் ஊரில் பள்ளிக்கூடமே இல்லை. ’தன்னைப் போல மற்றவர்களும் பள்ளிக்கூடம் செல்லாமல் இருக்கிறார்கள். பணம் சம்பாதித்து ஊரில் பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்று சபதம் எடுத்தார். அவருக்குத் தினமும் ரூ.150 ரூபாய் லாபம் கிடைக்கும். அந்தப் பணத்தை வைராக்கியமாக சேமிக்கத் தொடங்கினார்.

நினைத்த மாதிரியே தனது மொத்த சம்பாத்தியத்தையும் கொண்டு, ஒரு ஏக்கர் நிலத்தில் பள்ளிக்கூடம் கட்டி தனது சபதத்தை நிறைவேற்றினார். ‘எனக்கு படிப்பதற்கான வாய்ப்பே ஏற்படவில்லை. பள்ளிக்கூடம் இல்லாததால், எங்களைப் போலவே இப்போதைய சிறுவர்களும் ஆகிவிடக்கூடாது என்பதற்காக இந்தப் பள்ளியை கட்டினேன்’ என்று தெரிவித்திருக்கிறார், ஹஜப்பா!

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.