சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கு ரயில்வே போலீசாரிடமிருந்து சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சத்யஸ்ரீ (20) என்பவரைக் காதலித்து வந்தார். சத்யஸ்ரீ தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், வழக்கம்போல் நேற்று இருவரும் பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.
அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த சதீஷ், பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு சத்யாவை தள்ளிவிட்டுள்ளார். இதில் ரயிலில் சிக்கி சத்யஸ்ரீ உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
தாம்பரம் ரயில்வே போலீசார் இன்று அதிகாலை பதுங்கியிருந்த சதீஷை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் சதீஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில் , கடந்த ஐந்து வருடமாக இருவரும் காதலித்து வந்ததாகவும், அவரது வீட்டிற்குக் காதல் விவகாரம் தெரியவந்த நிலையில் கடந்த 7 மாதமாக சத்யாஸ்ரீ பேசாமல் இருந்துவந்ததும் தெரியவந்தது.
மேலும் கடந்த வாரம் சத்யஸ்ரீயின் உறவினரான ராகுல் என்பவருடன் அவருக்கு நிச்சயம் செய்யப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, அவரிடம் தன்னோடு வந்து விடுமாறு வற்புறுத்தியதாகவும், வரமறுத்த நிலையில், ரயில் முன் சத்யஸ்ரீயை தள்ளிவிட்டதாகவும் சதீஷ் வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து சத்யஸ்ரீயின் தந்தையும் இன்று விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.







