சோழ இளவரசர்களின் வழித்தடம்-நிழலும்…நிஜமும்…(பாகம் 3)

தலைமுறைகளை கடந்து தமிழகத்தின் பேசுபொருளாக நீடிக்கும் பொன்னியின் செல்வன் நாவல், தற்போது செல்லுலாய்டு விடிவிலும் வெள்ளித்திரையில் நிழலாடி வருகிறது. இளையவர், முதியவர் என அனைத்து தரப்பினரின் ஆதரவோடும் பொன்னியின் செல்வன்-பாகம் 1 திரைப்படம் திரையரங்குகளில்…

தலைமுறைகளை கடந்து தமிழகத்தின் பேசுபொருளாக நீடிக்கும் பொன்னியின் செல்வன் நாவல், தற்போது செல்லுலாய்டு விடிவிலும் வெள்ளித்திரையில் நிழலாடி வருகிறது. இளையவர், முதியவர் என அனைத்து தரப்பினரின் ஆதரவோடும் பொன்னியின் செல்வன்-பாகம் 1 திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பொன்னியின் செல்வன் நாவலில் சோழ இளவரசர்களான ஆதித்ய கரிகாலன், அருள்மொழிவர்மன் பயணித்த வழித்தடங்களாக கூறப்பட்டுள்ள இடங்களின் வரலாற்று பின்னணி மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்து கடந்த கட்டுரைகளில் பார்த்தோம். அவற்றின் தொடர்ச்சியாக சோழ இளவரசர்கள் குறித்த மேலும் சில தகவல்களை இந்த கட்டுரையில் பார்ப்போம். 

திருநல்லம்

பொன்னியின் செல்வன் நாவலில் தனி அத்யாயத்தோடு  போற்றப்படும் ஊர்களில் இந்த திருநல்லமும் ஒன்று. மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம் அருகே அமைந்துள்ள இந்த ஊர் தற்காலத்தில் கோனேரிராஜபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. பொன்னியின் செல்வரை அவரது காதலி வானதி முதல் முறையாக இங்குதான் சந்திப்பார்.  சோழ குலத்தார் இங்கு வந்தால் தங்குவதற்கென்றே திருநல்லத்தில் ஒரு வசந்த மாளிகை கட்டப்பட்டிருந்தது. அந்த மாளிகைக்கு வரும்போதுதான் அருள்மொழிவர்மனை கண்டு அவர் மீது வானதி காதல் வயப்படுவார்.  இந்த மாளிகையில் தங்கியிருந்துதான் செம்பியன் மாதேவி  பிரசித்தி பெற்ற கோயில்களை கருங்கல் கட்டிடங்களாக மாற்றும் பணிகளை கவனித்து வந்ததாக தமது நாவலில் கல்கி தெரிவித்துள்ளார். தமது வாழ்நாளில் 6 சோழ சக்கரவர்த்தியின் ஆட்சிகளை கண்டவர் செம்பியன் மாதேவி. கண்டராதித்த சோழரின் பட்டத்து ராணியான செம்பியன் மாதேவி தமது கணவரைப்போலவே சிவ பக்தியில் திழைத்து விளங்கினார்.

தேவாரப் பாடல் பெற்ற பல பிரிசித்தி பெற்ற தலங்களை செங்கற் கட்டிடத்திலிருந்து கருங்கல் கட்டிடங்களாக மாற்றிய பெருமை இவரைச் சேரும். அவ்வாறு செம்பியன் மாதேவியால் புதுப்பிக்கப்பட்ட தலங்களுள் ஒன்றுதான்  திருநல்லம் உமா மகேஸ்வரர் ஆலயம். இந்த கோயிலில் சோழர்கள் காலத்து வரலாற்றை நினைவூட்டும் வகையில் கல்வெட்டுக்களும், ஓவியங்களும், சிற்பங்களும் உள்ளன.

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பொறிக்கப்பட்ட அந்த கல்வெட்டுக்களில் கண்டராதித்த சோழர் மற்றும் அவரது பட்டத்துராணி செம்பியன் மாதேவி பெயர்கள் இடம்பெற்றுள்ளன.   மேலும் கண்டராதித்த சோழர் சிவலிங்க பூஜை செய்வது போன்ற சிற்பமும் இந்த ஆலயத்தில் இடம்பெற்றுள்ளது.

சிவகங்கை பூங்கா

பொன்னியின் செல்வன் நாவலில் வாசகர்களை மிகவும் கவர்ந்த வித்தியாசமான பெயர்களில் ஒன்று சேந்தன் அமுதன். அரண்மனையில் வாழாத இளவரசராக விளங்கிய சேந்தன் அமுதன் கதாபாத்திரம் யார் என்பது நாவலின் இறுதிப்பகுதியில் மிகப்பெரிய டிவிஸ்ட்ஆக இருக்கும்.தஞ்சையில் தற்போது முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கும் சிவக்ங்கை பூங்கா அருகே உள்ள தளிக்குள நாதர் கோயில் அருகேதான் சேந்தன் அமுதன் வாழ்ந்ததாக பொன்னியின் செல்வன் நாவல் கூறுகிறது. தளிக்குள நாதர் கோவிலுக்கும், மற்ற சிவ ஆலயங்களுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்து தீவிர சிவபக்தராக சேந்தன் அமுதன் வாழ்ந்துள்ளார். தஞ்சை பெரிய கோயில் அருகே சிவகங்கை பூங்காவின் குளத்திற்கு நடுவே அமைந்துள்ள தளிக்குள நாதர் கோயிலுக்கு பொதுமக்கள் சென்று வருவதற்காக  படகு சவாரியும் விடப்பட்டது. தற்போது சிவகங்கை பூங்காவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருநாரையூர்

கல்கி பொன்னியின் செல்வன் நாவல் வாயிலாக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சைவ, வைணவத் தலங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பிரசித்தி பெற்றிருந்ததை சுட்டிக்காட்டியிருப்பார். அவ்வாறு அந்த நாவலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள இடங்களில் ஒன்றுதான் திருநாரையூர் சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில்.

கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார் கோயில் அருகே இந்த திருத்தலம் அமைந்துள்ளது. அப்பர், சுந்தரர், ஆகியோரால் இயற்றப்பட்ட தேவாரப் பாடல் பெற்ற பெருமைக்குரியது சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில். தேவார திருமுறைகளை தொகுத்த நம்பியாண்டார் நம்பி பிறந்த ஊர்தான் இந்த திருநாரையூர். இவரை வந்தியத்தேவன் பழையாறை அரண்மனைக்கு அழைத்து வருவார். அங்கு மதுராந்தகத் தேவரையும், செம்பியன்மாதேவியையும் நம்பியாண்டார் நம்பி சந்திப்பார். பின்னர் செம்பியன் மாதேவியின் வேண்டுகோளை ஏற்று தேவார திருமுறைகளை நம்பியாண்டார் நம்பி தொகுத்ததாக பொன்னியின் செல்வன் நாவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருநாரையூர் சவுந்தர்யேஸ்வரர் கோயிலில் உள்ள பொல்லாப் பிள்ளையாரை வணங்கி அவரது துணையுடன் தேவார திருமுறைகளை நம்பியாண்டார் நம்பி தொகுத்ததாக கூறப்படுவதுண்டு.

கல்வெட்டுக்கள் கூறும் சாட்சியம்

பொன்னியின் செல்வன் நாவலில் அமரர் கல்கி குறிப்பிட்ட முக்கிய கதாபாத்திரங்கள் நிஜத்திலும் சரித்திர நாயகர்களாக வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கு சாட்சியாக பல்வேறு  கல்வெட்டுக்கள் திகழ்கின்றன. பொன்னியின் செல்வனில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் அந்த கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பிற்காலத்தில் ராஜராஜ சோழன் என போற்றப்பட்ட அருள்மொழி வர்மன் கட்டிய தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலில் அவரது பெயர், வல்லவரையன் வந்தியத்தேவன், குந்தவை பிராட்டியார் உள்ளிட்ட கதாபாத்திரங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. திருநாரையூர் கல்வெட்டில் அருள்மொழிவர்வன் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.  சுந்தரசோழரின் மூத்த மகனும் பட்டத்து இளவரசராக முடிசூட்டப்பட்டவருமான ஆதித்ய கரிகாலன் பெயர், உடையார்குடி கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உடையார்குடி அனந்தீஸ்வரர் கோயிலில் காணப்படும் கல்வெட்டுக்கள் உடையார்குடி கல்வெட்டுக்கள் என அழைக்கப்படுகின்றன. ஆதித்ய கரிகாலனை கொன்றவர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை குறித்து இந்த கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் நாவலில் ஆதித்ய கரிகாலனை கொல்வதற்கு ரவிதாசன் என்கிற கதாபாத்திரம் சூழ்ச்சி செய்வதாக காட்டப்பட்டிருக்கும். அந்தக் கதாபாத்திரத்தின் பெயரும் உடையார்குடி கல்வெட்டில் இடம்பெற்றுள்ளன. கண்டராதித்த சோழர் மற்றும் அவரது பட்டத்து ராணியின் பெயர்கள் திருநல்லம் உமா மகேஸ்வரர் ஆலயத்தில் இடம் பெற்றுள்ளன.

பழுவேட்டரையர்கள் என்கிற பெயரும், அவர்கள் குறித்த குறிப்புகளும் பழுவூர் அவனி கந்தர்வ ஈஸ்வரம் கோயில் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளன. குறுநில மன்னர்களான பழுவேட்டையர்களின் தலைநகராக சோழர்கள் காலத்தில் விளங்கிய பழுவூர் தற்போது அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் நகரம் அருகே அமைந்துள்ளது. மேலப்பழுவூர், கீழையூர், கீழப்பழுவூர் என்று 3 சிற்றூர்களாக தற்போது பழுவூர் அறியப்படுகிறது. கண்டராதித்த சோழரின் மகனான மதுராந்தக தேவரின் பெயர் திருக்கோட்டிக்கா கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.  பொன்னியின் செல்வன் நாவல் என்பது ஒரு நாவல் மட்டுமல்ல அந்த கற்பனையில் நிஜ சரித்திரமும் அடங்கியிருக்கிறது என்பதற்கு சான்றாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் திகழ்கின்றன.

-எஸ்.இலட்சுமணன்

 

 

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.