போலீஸ் பாதுகாப்போடு நீதிமன்றம் வந்த பிரபல ரவுடியை கொலை செய்ய முயன்ற கும்பல்

சென்னையில், பாதுகாப்புடன் கூலிப்படை தலைவனை போலீசார் நீதிமன்றம் அழைத்து சென்றபோது, மர்ம கும்பல் அவரை கொலை செய்ய முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு மதுரை பாலா என்ற பிரபல ரவுடியை…

சென்னையில், பாதுகாப்புடன் கூலிப்படை தலைவனை போலீசார் நீதிமன்றம் அழைத்து சென்றபோது, மர்ம கும்பல் அவரை கொலை செய்ய முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு மதுரை பாலா என்ற பிரபல ரவுடியை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். அவர் கூலிப்படை தலைவன் என்பதோடு, அவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது.

 

இந்நிலையில், பிரபல ரவுடியான மைலாப்பூர் சிவக்குமாரை அசோக் நகர் பகுதியில் வைத்து கூலிப்படை மூலமாக மதுரை பாலா கொலை செய்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக போலீசார் துப்பாக்கி பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். அப்போது, நீதிமன்றம் அருகே அவர்கள் சென்றதும் 5 பேர் கொண்ட கும்பல் மதுரை பாலாவை கொலை செய்ய முயற்சித்துள்ளனர்.

கையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பாலாவை கொலை செய்ய நெருங்கியபோது, பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்ததாக கூறப்படுகிறது. போலீசார் திட்டத்தை தடுத்ததால், அவர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி ஓடினர். ஆனால், பாலாவை கொலை செய்ய வந்தவர்களில் மூன்று பேர் தப்பி ஓடிய நிலையில், 2 பேரை போலீசார் பிடித்தனர்.

 

மேலும் அவர்களிடமிருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்ததோடு, இது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, மாமூல் வசூல் செய்வதில் ஏற்பட்ட தகராறில் ரவுடி பாலாவை கொலை செய்ய முயன்றது முதற்கட்டமாக தெரியவந்துள்ளது. பலத்த காவல்துறை பாதுகாப்புடன் நீதிமன்றம் அழைத்து செல்லப்பட்ட குற்றவாளியை மர்ம நபர்கள் துணிச்சலாக சென்று கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.