சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி துரைசாமியை மத்திய சட்டத்துறை அமைச்சகம் நியமித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போதைய தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி பதவி வகித்து வருகிறார். அவருடைய பதவிகாலம் வரும் 13ம் தேதியுடன் நிறைவடைகிறது. முனீஸ்வர்நாத் பண்டாரி ஓய்வு பெறும் நிலையில் அடுத்த தலைமை நீதிபதி நியமனம் செய்யப்படும் வரை சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி எம்.துரைசாமி பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்படுவார் என மத்திய சட்டத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சஞ்சீப் பானர்ஜி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2021 ஜனவரி மாதம் பொறுப்பேற்ற நிலையில், அதே ஆண்டு நவம்பர் மாதம் அவர் மேகாலயாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதன்பிறகு முனீஸ்வர் நாத் பண்டாரி பொறுப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டு, பின்னர் தலைமை நீதிபதியாக பணியமர்த்தப்பட்டார்.
வரும் 13ஆம் தேதியுடன் முனிஸ்வர் நாத் பண்டாரிக்கு 62 வயது நிறைவுபெறுவதால் ஓய்வுபெறுகிறார். இதனையடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி பொறுப்பு ஏற்கவுள்ளார்.







