செங்கல்பட்டு மாவட்டம் கடலூர் கிராமம் அடுத்த ஆலி குப்பம் மீனவ பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டு வீடுகள், சாலைகள், மின் கம்பங்கள் கடலில் இழுத்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து மற்றும் மின்சார துண்டிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று தென்மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கடலோர மாவட்ட கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த கடலூர் கிராமம், ஆலி குப்பம் மீனவ பகுதியில் கடலில் ஏற்பட்டுள்ள சீற்றம் காரணமாக மின் கம்பங்கள், வீடுகள், சாலைகள் அனைத்தும் கடலில் இழுத்துச் செல்லப்பட்டதால் நேற்று இரவு முதல் மின்சாரம் மற்றும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் இருந்த கடல் கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்கு அருகாமையில் வந்ததால் வீடுகள் கடலில் மூழ்கி வீடுகளை இழந்தோர் தவித்து வருகின்றனர். தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தும் அரசு செவி சாய்க்காததால் இது போன்று புயல் மழை காலங்களில் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருவதாக வேதனை தெரிவித்தனர்.
இதற்கு அதிகாரிகள் உடனடியாக தீர்வு காணவில்லை என்றால் தங்களது ஆதாரங்களான, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை அனைத்தையும் அரசிடமே திருப்பி தரபோவதாகவும் கடலூர் மீனவர் பகுதி 3 கிராம மக்களும் ஒன்றிணைந்து கிழக்கு கடற்கரை சார்ந்த மிகப்பெரிய சாலை மறியல் போராட்டத்தை நடத்தப் போவதாகவும் அப்பகுதி மக்கள் மக்கள் தெரிவித்துள்ளனர்.
- பி.ஜேம்ஸ் லிசா










