எடப்பாடி ஒன்றியம் நெடுங்குளம் அருகே காவிரி ஆற்றில் ரசாயன கழிவுகள் கலப்பதால் மீன்கள் செத்து மிதப்பதோடு, துர்நாற்றமும் வீசுவதாக பொதுமக்கள்மற்றும் மீனவா்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் நெடுங்குளம் ஊராட்சியின் அருகே உள்ள
கோட்டைமேடு பரிசல் படித்துறை மற்றும் அதன் அருகிலுள்ள காவிரி ஆற்றின்
கரையோரத்தில் பல ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தது. இதனால் அந்த
காவிரியில் துர்நாற்றம் வீசுவதால் தண்ணீர் எடுக்கவும், துணி துவைக்கவும்
குளிக்கவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி பொதுமக்களும்,
மீனவர்களும் கூறும்போது, கடந்த இரண்டு மாதங்களாக காவிரி ஆற்றின் தண்ணீர்
மிகவும் மாசடைந்து வருவதாகவும் அவ்வப்போது அதிக அளவில் மீன்கள் செத்து மிதப்பதாகவும் குற்றம் சாட்டிய அப்பகுதி பொதுமக்கள் ஆற்று நிறைய தண்ணீர் சென்றாலும் இதனை குளிப்பதற்கோ? குடிப்பதற்கோ? துணி துவைப்பதற்கோ? பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினர்.
இதனிடையே மீனவர் ஒருவர் கூறும் போது, தான் பரிசலில் மீன் பிடித்து வருவதாகவும், கடந்த இரண்டு மாதங்களாக ரசாயன கழிவுகள் கலந்து தண்ணீர் மாசடைந்து வருவதால் சரியாக மீன் கிடைப்பதில்லை எனவும், மேலும் துர்நாற்றம் வீசி வருவதால் மீன்கள் அதிக அளவில் செத்து மிதந்து வருவதாகவும் தினந்தோறும் ஆயிரம் ரூபாய் மதிப்பில் மீன்கள் பிடித்து வந்தவர் தற்போது 100 ரூபாய் மற்றும் 200 ரூபாய் மதிப்பில் மட்டுமே மீன்கள் கிடைத்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தார்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ரூபி.காமராஜ்







