மதுரையில் உள்ள ஹோட்டலில் ஜூஸ்போட வைத்திருந்த முலாம் பழத்தை எலி ஒன்று சாப்பிட்டுவிட்டு துள்ளி குதித்து விளையாடிய காட்சியானது, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சென்னை, ஆந்திரா, கர்நாடகா , கேரளா உள்ளிட்ட
மாநிலங்களுக்கும் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் செல்லக்கூடிய
நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கிறது. இதனால் மாட்டுத்தாவணி பேருந்துநிலையம் மற்றும் ஆம்னி பேருந்துநிலையத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வருகை தருவார்கள்.
இந்த நிலையில் பயணிகள் மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள பல்வேறு உணவகங்களில் உணவுகள் மற்றும் குளிர்பானங்கள், ப்ரூட் ஜூஸ்கள் உள்ளிட்டவைகளை அருந்தி செல்லும் நிலையில், மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் எதிரே டெம்பிள்சிட்டி உணவகத்தின் முன்புறம் அமைந்திருந்த பழக்கடை ஒன்றில் ஜூஸ் போடுவதற்காக வைக்கப்பட்டிருந்த முலாம் பழத்தில் எலி ஒன்று அதனை சாப்பிட்டு விட்டு துள்ளி குதித்து விளையாடும் வீடியோ காட்சியானது தற்பொழுது சமூக வலைதளங்களை ட்ரெண்டாகி வருகிறது.
இந்த வீடியோ மாட்டுத்தாவணி பகுதிகளில் உள்ள கடைகளில் ஜூஸ் மற்றும் உணவுகளை சாப்பிடுபவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து செல்லக்கூடிய ஒரு பகுதியில் உள்ள கடையில் இது போன்று அலட்சியமாக எலி உண்ட பழங்களை பயன்படுத்தி ஜூஸ் கொடுத்து இதனால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
எனவே இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க
வேண்டும் எனவும் ஒவ்வொரு கடைகளுக்கும் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் குளிர்பான கடைகளில் அருகே கழிவுநீர் வாய்க்கால்கள் அமைந்துள்ளதாலும், உணவகங்களில் உள்ள கழிவறைகள், குப்பை தொட்டி பகுதிகளில் அதிகளவிலான எலிகளின் நடமாட்டம் உள்ள நிலையில் உரிய பாதுகாப்புடன் பழங்கள் மற்றும் உணவுகளை பாதுகாத்து உரிய முறையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
—ரூபி.காமராஜ்







