நூலகங்கள் மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் மாநில அரசுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
பொதுப் பட்டியலில் இருந்து வரும் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் மாநிலங்களில் உள்ள நூலகங்களை மத்திய அரசு பொதுப்பட்டியலுக்கு மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நூலகங்களை பொதுப் பட்டியலுக்கு மாற்றும் முடிவிற்கு எதிராக மாநில அரசுகள் கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றன. மத்திய மாநில அரசுகளுக்கு சம அதிகாரம் உள்ள நூலகங்களை பொதுப்பட்டியலுக்கு கொண்டு வருவதற்கான மசோதாவை மத்திய கலாச்சார அமைச்சகம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து கேரள மாநில நூலகக் குழுவின் செயலாளர் வி.கே.மது தெரிவித்துள்ளதாவது..
“நூலகங்களை பொதுப்பட்டியலுக்கு மாற்றுவதன் மூலம் சிந்தாந்தரீதியான பாஜகவின் கருத்துக்களை திணிப்பதற்கு அவை உதவும். இதன் மூலம் அறிவியல்பூர்வமான மற்றும் முற்போக்கான கருத்துக்களை கொண்ட புத்தகங்களை நூலகங்களில் இருந்து அகற்றிவிட்டு பிற்போக்கு கருத்துக்களை விதைக்கும் புத்தகங்கள் மாற்றப்பட வாய்ப்புள்ளது.
கேரளாவின் உயர்கல்வித் துறை அமைச்சர் ஆர்.பிந்து கூறுகையில் “ நூலகங்களை பொதுப்பட்டியலுக்கு மாற்றும் முடிவின் மூலம் பிற்போக்குத்தனமான கருத்துக்களை பரப்ப மத்திய அரசு முயற்சிக்கிறது. இதற்கு பதிலாக கேரளாவில் நவீனப்படுத்தப்பட்ட நூலகங்களை முன்மாதிரியாக கொண்டு புதிய நூலகங்களை கட்டமைக்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்தியாவிலேயே அதிக பொது நூலகங்களை கொண்ட மாநிலமாக கேரள மாநிலம் உள்ளது. கேரளாவை அடுத்து கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் அதிக பொது நூலகங்களை கொண்டுள்ளன. மத்திய அரசின் இந்த முடிவிற்கு எதிராக கேரள மாநிலத்தை தொடர்ந்து அனைத்து மாநில எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிக பொது நூலகங்கள் உள்ள மாநிலங்கள்
- கேரளா – 8415
- கர்நாடகா – 6797
- தமிழ்நாடு – 4634
- மேற்கு வங்கம் – 2480
- ஆந்திரா – 978
இந்தியாவில் குறைந்த பொது நூலகங்கள் உள்ள மாநிலங்கள்
- மிசோரம் – 6
- சண்டிகர் – 7
- மேகாலயா – 8
- சிக்கிம் – 10
- மணிப்பூர் – 13







