கோயம்பேட்டில் வரத்து அதிகரிப்பு எதிரொலி; தக்காளி ரூ.20 குறைந்து ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனை!

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக தக்காளி ஒரு கிலோ ரூ. 200-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது படிப்படியாக குறைந்து, அனைத்து இடங்களிலும் ரூ.70-க்கும் கீழ் விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள்…

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக தக்காளி ஒரு கிலோ ரூ. 200-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது படிப்படியாக குறைந்து, அனைத்து இடங்களிலும் ரூ.70-க்கும் கீழ் விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தமிழகத்தில் கடந்த 45 நாள்களுக்கும் மேலாக தொடா்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்த தக்காளியின் விலை ரூ.200 ல் இருந்து படிப்படியாக குறைந்து கடந்த சில நாள்களாக ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அது தற்போது சரிந்து இன்று ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது நேற்றைய விலையில் இருந்து ரூ.20 குறைவாகும்.

சென்னை கோயம்பேடு, காய்கறி சந்தைக்கு ஆந்திரம், கா்நாடகம் மற்றும் அருணாசலபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வழக்கமாக 60 லாரிகளுக்கு மேல் தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படும். தக்காளி பயிரிடப்படும் மாநிலங்களில் தொடா்ச்சியாக மழை பெய்து வந்ததால், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக, சராசரியாக 25-ல் இருந்து 35 லாரிகள் வரை மட்டுமே தக்காளி விற்பனைக்காக வந்தது. இதனால் தக்காளி விலை சட்டென உயர்ந்து ஏறுமுகமாகவே காணப்பட்டது. வெளிச் சந்தைகளில் ரூ.210 வரை விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

தற்போது பல மாநிலங்களில் மழையின் அளவு வெகுவாக குறைந்துள்ளதால், கோயம்பேடு மாா்க்கெட்டுக்கு தக்காளி வரத்து கடந்த சில நாள்களாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் தக்காளியின் விலை மெல்ல மெல்ல குறைய தொடங்கி உள்ளது. நேற்றைய நிலவரப்படி, கோயம்பேடு சந்தைக்கு 700 டன் தக்காளி வந்துள்ளதால் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்து ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது அடுத்த வாரங்களில் இன்னும் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.