கழிவுநீர் தொட்டி மரணங்கள்; 3வது இடத்தில் தமிழகம் – நாடாளுமன்றத்தில் தகவல்

கழிவுநீர் தொட்டிகளில் உள்ள கழிவுகளை அகற்றும் போது நடப்பு ஆண்டில் 48 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், இதில் தமிழகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர் ஒருவர், நாடு முழுவதும்…

கழிவுநீர் தொட்டிகளில் உள்ள கழிவுகளை அகற்றும் போது நடப்பு ஆண்டில் 48 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், இதில் தமிழகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர் ஒருவர், நாடு முழுவதும் கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்யக்கூடிய பணிகளில் ஈடுபட்ட ஊழியர்களின் உயிரிழப்பு அதிகரித்து உள்ளதா? இதனை தடுப்பதற்கு மத்திய அரசு எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது? என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்தவாலே, பாதாள சாக்கடைகள் மற்றும் கழிவு நீர் தொட்டிகள் ஆகியவற்றில் உள்ள கழிவுகளை அகற்றும் போது கையால் அகற்றக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், கழிவு நீர் தொட்டிகளில் ஊழியர்கள் உயிரிழப்பதை தடுப்பதற்கு மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட நாட்டின் 20 மாநிலங்களில் இந்த ஆண்டில், பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டிகளில் உள்ள கழிவுகளை அகற்றும் போது 48 பேர் உயிரிழந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக ஹரியானா மாநிலத்தில் 13 பேரும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 12 பேரும், 3வதாக தமிழகத்தில் 10 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.