புதிய கல்விக் கொள்கை 2020ன் படி- 4 ஆண்டு ஹானர்ஸ் படிப்பிற்கான பரிந்துரையை யுஜிசி வழங்கியுள்ளது.
உயர்கல்வியில், புதிய கல்விக் கொள்கை -2020(NEP)ஐ நடைமுறைப்படுத்துவதில் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் 4 ஆண்டு இளநிலை ஹானர்ஸ் படிப்பை UGC அறிமுகப்படுத்தி உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நான்கு ஆண்டு இளநிலை படிப்பில், முதல் ஆண்டு (2 செமஸ்டர்கள்) படித்தால் சான்றிதழ் படிப்பிற்கான தகுதிச் சான்றிதழும், 2 ஆண்டுகள் (4 செமஸ்டர்கள்) படித்தால் பட்டயச்சான்றிதழும், 3 ஆண்டுகள் (6 செமஸ்டர்கள்) படித்தால் இளநிலை பட்டமும், 4 ஆண்டுகள் (8 செமஸ்டர்கள்) படித்தால் கௌரவ இளநிலை பட்டமும் வழங்கப்படும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.
மேலும் மாணவர்களுக்கான தேர்வு முறை மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்களுக்கான ஹானர்ஸ் பட்டம் வழங்கப்பட உள்ளது. முதல் 6 செமஸ்டர்களில் 75 சதவீத மதிப்பெண் எடுத்திருக்கும் மாணவர்கள் ஆய்வு படிப்பை மேற்கொள்ள விரும்பினால், 4வது ஆண்டில் சேரலாம். 4 ஆண்டு முடிவில் 160 மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ஹானர்ஸ் பட்டம் மற்றும் ஆராய்ச்சியுடன் கூடிய ஹானர்ஸ் பட்டம் வழங்கப்படும்.
இளங்கலை படிப்பில் 40 மதிப்பெண்களுடன் முதலாம் ஆண்டில் படிப்பை நிறுத்த விரும்பும் மாணவர்கள் முதலாமாண்டு கோடை விடுமுறையில் கூடுதலாக 4 மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு தொழிற்கல்வி படிப்பை முடித்திருந்தால், அவர்கள் 3 ஆண்டிற்குள் மீண்டும் சேர்ந்து, 7 ஆண்டுகளுக்குள் படிப்பை முடித்துக் கொள்ளலாம்.
அதே போல், 80 மதிப்பெண்களுடன் 2வது ஆண்டில் படிப்பை நிறுத்த விரும்பும் மாணவர்கள், 2வது ஆண்டு கோடை விடுமுறையில் கூடுதலாக 4 மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு தொழிற்கல்வி படிப்பை முடித்திருந்தால், அவர்கள் 3 ஆண்டிற்குள் மீண்டும் சேர்ந்து, 7 ஆண்டுகளுக்குள் படிப்பை முடித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த நான்கு ஆண்டுகள் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தாவிட்டாலும், மூன்று ஆண்டுகள் நடைமுறையில் உள்ள பாடத்திட்டத்தில் புதிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் யுஜிசி அறிவுறுத்தி உள்ளது.