கோவையில் அரசு பணியாளரை காலில் விழ வைத்த அதிர்ச்சி சம்பவம்

கோவை அன்னூர் அருகே பட்டியலினத்தை சேர்ந்த அரசு பணியாளரை காலில் விழ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஒற்றர் பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் உதவியாளராக முத்துச்சாமி என்பவர்…

கோவை அன்னூர் அருகே பட்டியலினத்தை சேர்ந்த அரசு பணியாளரை காலில் விழ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஒற்றர் பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் உதவியாளராக முத்துச்சாமி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த கோபிநாத் என்பவர், தன்னுடையை சொத்து விவரங்கள் சரிபார்ப்புக்காக கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வியை சந்தித்துள்ளார். அப்போது, ஆவணங்கள் முறையாக இல்லை என்றும், உரிய ஆவணங்களை எடுத்து வரவேண்டும் என்றும் கிராம நிர்வாக அலுவலர் கூறியதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த கோபிநாத், அவரை தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, அலுவலகத்தில் தண்டல்காரராக பணியாற்றி வரும் முத்துசாமி என்பவர், அரசு அதிகாரியிடம் இப்படி தவறுதலாக பேச வேண்டாம் என கூறியுள்ளார்.

இதில், ஆத்திரமடைந்த கோபிநாத் முத்துச்சாமியின் சாதியை கூறி திட்டியதாக தெரிகிறது. அத்துடன் தனது காலில் விழுந்து மன்னிப்பு கேட்குமாறும் இல்லாவிட்டால் இந்த ஊரில் இருக்க முடியாது எனவும் கோபிநாத் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால், செய்வதறியால் தவித்த முத்துச்சாமி கோபிநாத் காலில் விழுந்து கதறி அழுதபடி மன்னிப்பு கேட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். தற்போது மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.