யானைக் கூட்டம் திடீரென்று விரட்டியதால், காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் தண்ணீர் தொட்டியில் ஏறி தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பளிதனஹர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ, மோகித் ராம் கெர்கெட்டா (Mohit Ram Kerketta). அந்த மாநிலத்தின் கோப்ரா மாவட்டத்தில் உள்ள கோட்காரா வனப் பகுதியில் சில நாட்களுக்கு முன் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்தார். வனப் பகுதியில் வசித்த அவர் குடும்பத்துக்கு ஆறுதல் கூற, கடந்த வியாழக்கிழமை எம்.எல்.ஏ மோகித் ராம் சென்றார். அவருடன் கட்சித் தொண்டர்களும் சென்றனர்.

குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிவிட்டு, அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணத்துக்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். பின்னர் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். இரவு நேரம் என்பதால், வனப்பகுதியில் நடந்து வந்துகொண்டிருந்தபோது, திடீரென்று காட்டு யானைகள் அவர்களை வழிமறித்தன.
பின்னர் அவர்களை விரட்டத் தொடங்கின. அதிர்ச்சி அடைந்த எம்.எல்.ஏ மற்றும் அவர் ஆதரவாளர்கள், தலைதெறிக்க ஓடினர். அருகில் தண்ணீர் தொட்டி இருப்பதைக் கண்டனர். உடனடியாக அதில் ஏறிச் சென்று உயிர் தப்பினர்.
பின்னர் வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து யானை களை விரட்ட முயன்றனர். ஆனால், அவை செல்லவில்லை. சுமார் 2 மணி நேரம் அந்தப் பகுதியையே யானைகள் சுற்றிச் சுற்றி வந்தன. யானைகள் சென்ற பிறகு, எம்.எல்.ஏவை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.








