நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றிபெற்றார். இதனையடுத்து முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் பெரம்பூர் தொகுதியில் வெற்றிபெற்றதை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதேபோல திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றிபெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதையராஜ் வழக்கு தொடர்ந்தார். மேலும் வில்லிவாக்கம் தொகுதியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுணாவின் வெற்றியை எதிர்த்தும் திமுக வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில் முதலமைச்சர் விஜய்க்கு எதிரான 4 வழக்குகளும் இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தேர்தல் வழக்கு தொடர்பாக 3 வாரங்களில் முதலமைச்சர் விஜய் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார். அதேபோல அமைச்சர் ஆதவ் அர்ஜுணாவும் 3 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.




