IND vs ENG : சஞ்சுவிற்கு பதில் வைபவ் ஏன்…? – சர்ச்சைகளுக்கு காம்பீர் விளக்கம்…!

சஞ்சு சாம்சன் இந்தியாவுக்காகச் செய்திருப்பது அபாரமானது என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 -வது டி 20 போட்டி நேற்று நடைபெற்றது. முதல் டி 20 போட்டி மழையால் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது டி 20 போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து மூன்றாவது டி 20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. ஆனால் இங்கிலாந்து நிர்ணயித்த 202 என்கிற இலக்கை எட்ட முடியாமல் 76 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை தழுவியது.

மூன்றாவது டி 20 போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக வைபவ் சூர்யவன்ஷி அணியில் சேர்க்கப்பட்டார். இது பேசு பொருளானது. அயர்லாந்துக்கு எதிரான இரண்டு டி20 போட்டிகளிலும், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியிலும் சஞ்சு சாம்சன் சோபிக்கத் தவறினார். இதனால் வைபவ் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் 2026 டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சனை அணியிலிருந்து நீக்கிய நிர்வாகத்தின் முடிவு குறித்து சர்ச்சை தொடர்ந்து வந்தது.

இந்த சர்ச்சை குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் கூறியதாவது: சஞ்சு சாம்சனுக்குத் கொடுக்கப்பட வேண்டிய விளக்கத்தை என் தரப்பிலிருந்து அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அது வீரருக்கும் தலைமைப் பயிற்சியாளருக்கும் இடையேயான ஒரு உரையாடல். அந்த உரையாடல் வெளியே வராது.

சஞ்சுவைப் பொறுத்தவரை, நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். அவர் இந்தியாவுக்காகச் செய்திருப்பது அபாரமானது, சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட வீரரின் ஆட்டத்திறனைப் பார்க்க வேண்டும். இந்தத் தொடரில் அவர் மீண்டும் களமிறங்கக் கூடாது என்று எந்தக் கடுமையான விதியும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.