“விளம்பரம் தேடும் Outdated அரசியல்” – காங்கிரஸ் மீது நயினார் கடும் தாக்கு….!

காங்கிரஸ் கட்சி உள்ளூர் கூட்டணிக் கட்சிகளின் குறைகளை சுட்டிக் காட்டாமல் பாஜகவை வம்பிழுப்பது “Outdated” அரசியல் Version என்று தமிழ் நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

எதற்கு இத்தனை பதற்றம்? எதற்கு இத்தனை கதறல்கள்? தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் அவர்களே? மத்தியில் ஆட்சியில் இருந்த போது நமது தேசத்திற்கும் தமிழகத்திற்கும் காங்கிரஸ் கட்சி செய்த துரோகங்களை நாங்கள் பட்டியலிட்டுள்ளோம். அதற்கு உங்களிடம் பதிலில்லை. VB G RAM G திட்டத்தின் மீது உங்களுக்கு அத்தனை எதிர்ப்பு இருக்குமானால், இத்திட்டத்தை வெற்றிகரமாக தமிழகத்தில் செயல்படுத்திக் கொண்டிருக்கும், நீங்கள் அங்கம் வகிக்கும் தவெக கூட்டணி அரசிடம் முறையிடுங்கள் என்பதை தெளிவுபடுத்தியுள்ளோம். அதற்கும் உங்களிடம் பதிலில்லை. அத்தனை யோக்கியமான கட்சியாக இருக்கும் பட்சத்தில், ஏன் 12 ஆண்டுகளாக அரியணையின் பக்கம் கூட காங்கிரஸால் நெருங்க முடியவில்லை என்று கரிசனமாகத் தான் கேட்கிறோம், அதற்கும் உங்களிடம் பதிலில்லை.

மாநில உரிமைகளை நசுக்கி, ஒட்டுமொத்த தேசத்தையும் சிறைபிடித்த காங்கிரஸின் “எமர்ஜென்சி” காலத்தைப் பற்றி ஆதாரத்துடன் கோடிட்டுக் காட்டி நாங்கள் கேள்வி கேட்கிறோம், ஆனால் நீங்களோ ஏதோ “மறைமுக எமர்ஜென்சி” என்று மடைமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். இப்படியாக எங்களின் எந்த நேரடிக் கேள்விகளுக்கும் பதில் கூறாமல், ஜூலை 7 ஆம் தேதி, 8.50 pm மணியளவில் பதிவிட்ட உங்களின் முதல் டிவிட்டர் பதிவில் உள்ள அதே பொய் கருத்துக்களை, அச்சுப் பிசகாமல் அப்படியே மீண்டும் இன்று “Copy,Paste” செய்துள்ளீர்கள்.

“நேஷனல் ஹெரால்டு” விவகாரத்தில் இன்னும் வழக்கு நிலுவையில் உள்ளத்தையும், உங்கள் தலைவர்கள் எந்த நேரத்திலும் சிறை செல்ல நேரிடும் என்பதையும் மறந்து விட்டு, ஏதோ வழக்கில் இருந்து விடுதலையானது போலவே பதறுகிறீர்கள். மாநிலங்களுக்குண்டான நிதிப்பகிர்வை பற்றி மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள், பலமுறை தெளிவாக எடுத்துக் கூறி விட்டார் என்பதை அறியாமல் “29 பைசா” என்ற திமுகவின் பழைய புராணத்தையே இன்னும் பாடிக் கொண்டிருக்கிறீர்கள்.

ராமர் கோவிலில் தவறு நடந்துள்ளதா என்பதை விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தை நீங்கள் பூதாகாரமாக்குவதைப் பார்த்தால், உங்களின் ஏதோவொரு தில்லுமுல்லுவை திசை திருப்ப முயற்சிக்கிறீர்களோ என்று தோன்றுகிறது.

எனவே, ஆடத் தெரியாதவர் தெருக் கோணல் என்று சொன்ன கதையாக, உள்ளூரில் உள்ள கூட்டணிக் கட்சிகளின் குறைகளை சுட்டிக் காட்டும் திராணியற்ற நீங்கள், எதெற்கெடுத்தாலும் பாஜகவை வம்பிழுத்து அதில் விளம்பர வெளிச்சம் தேட முயல்வது “Outdated” அரசியல் Version. உண்மைகள் உறுத்தும் நிஜ உலகில் இருந்து தப்பிக்க முயலும் Diversion Politics . No comments Simply Waste. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.