34.4 C
Chennai
May 14, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

நண்பன் இப்ராகிம் ராவுத்தரை காணச் சென்ற கேப்டன்…

நட்புக்கு இலக்கணம் என்று ஒட்டுமொத்த திரையுலகமும் பெருமிதத்துடன் கூறுவது விஜயகாந்த் – இப்ராகிம் ராவுத்தர் நட்பை…. இவர்களின் நட்பு வாழ்க்கை தான் என்ன? விரிவாக பார்க்கலாம்…

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைந்த செய்தி அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் தொடங்கி லட்சக்கணக்கான சினிமா ரசிகர்கள் வரை பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. நேரிலும் சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடல் இன்று மாலை 4.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் விஜயகாந்த் வாழ்க்கை பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள், வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வரிசையில் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரசித்திபெற்ற நட்புகளில் ஒன்றான விஜயகாந்த் – இப்ராகிம் ராவுத்தர்  நட்பு பற்றி இங்கே பார்க்கலாம்.

கேப்டனின் வாழ்விலும் வளர்ச்சியிலும் முக்கியமான பங்கு வகித்த ஒரு உன்னதமான நண்பர் ராவுத்தர். விஜயராஜ் ஆக இருந்து சினிமாவில் வாய்ப்பு தேடி சென்னைக்கு படையெடுத்தபோது நண்பனை தனியாக அனுப்ப மனமில்லாமல் அவருடனே மதுரையில் இருந்து கிளம்பி வந்த நண்பர் தான் இப்ராகிம் ராவுத்தர். நண்பனின் கனவையே தன்னுடைய கனவாக எண்ணி, அதற்காக இருவரும் சேர்ந்து எதிர் கொண்ட கடினமான சூழல்கள் ஏராளம். விஜயகாந்த் நடித்த படங்கள் அனைத்தின் கதையையும் கேட்டு எது அவருக்கு சரியான படமாக இருக்கும், வெற்றிப் படமாக அமையுமா என்பதில் தொடங்கி, கால்ஷீட் கொடுப்பது, சம்பளம் பேசுவது என அனைத்து வேலைகளையும் ராவுத்தரே கவனித்து வந்தார்.

விஜயகாந்தின் சினிமா வாழ்க்கையை வடிவமைத்து மொத்தமாக இயக்கியவர் ராவுத்தர் தான். நண்பனின் பேச்சுக்கு விஜயகாந்த் மறுவார்த்தை பேசியதே கிடையாதாம். அப்படி தனக்கு விருப்பமே இல்லை என்றாலும், ராவுத்தர் சொன்னார் என்பதற்காக நடித்த திரைப்படங்கள் ஏராளம். அதில் ஒன்று தான் ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் வெளியான ‘புலன் விசாரணை’ திரைப்படம்.

விஜயகாந்த்திற்காகவே திரைப்படத் தயாரிப்பாளரான இப்ராகிம் ராவுத்தர், தமிழ் அன்னை சினி கிரியேசன்ஸ், ராவுத்தர் பிலிம்ஸ் மற்றும் ஐ.வி.சினி புரொடெக்சன்ஸ் என்ற பேனர்களில் பல்வேறு திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். இந்த பெயரில் விஜயகாந்த் நடிப்பில் ஏராளமான வெற்றி திரைப்படங்களும் வெளியாகின.

இயக்குநர் அரவிந்த்ராஜ் இயக்கத்தில் வெளிவந்த உழவன் மகன் திரைப்படம் தான், ராவுத்தர் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படம். 1987-ல் வெளியான இந்த திரைப்படம், அந்த வருடம் தீபாவளி ரிலீஸான ரஜினியின் மனிதன், கமல்ஹாசனின் நாயகன் திரைப்படங்களுடன் போட்டியிட்டு, வெற்றி பெற்ற திரைப்படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து ராவுத்தர் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த 1992-ல் பரதன் மற்றும் தாய்மொழி, 1993-ல் ராஜதுரை,  1995-ல் கருப்பு நிலா,1998-ல் தர்மா ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. மொத்தமாக ராவுத்தர் பிலிம்ஸ் பெயரில் விஜயகாந்த் 6 திரைப்படங்களில் நடித்திருந்தார்.

1980-களில் பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் திடீரென ஒரு சரிவு ஏற்பட்ட போது மீண்டும் வறுமை நிலைக்கு சென்றார் விஜயகாந்த். அடுத்த வேலை உணவுக்கு கூட கஷ்டப்படும் அளவுக்கு நிலை மாறியது. அந்த நிலையில் கூட விஜயகாந்துடன் தான் இருந்தார் ராவுத்தர். அப்போது அவருக்கு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘முரட்டுக் காளை’ படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்தது. ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்திற்கான செக்கையும் பெற்றுக்கொண்டார் விஜயகாந்த். 

ஆனால் ராவுத்தரோ விஜயகாந்த் அந்தப் படத்தில் நடிக்கவே கூடாது என விடாப்பிடியாக சொல்லிவிட்டார். “நீ ஹீரோவாகவே நடிக்க பிறந்தவன். எக்காரணம் கொண்டும் வில்லனாக நடிக்கக் கூடாது” என ராவுத்தர் சொல்லியதால் தான் வாங்கிய செக்கை கூட திருப்பி அனுப்பிவிட்டாராம் விஜயகாந்த். இதனையடுத்து 1991-ல் விஜயகாந்தின் நூறாவது திரைப்படமான கேப்டன் பிரபாகரன் வெளிவந்த திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றதுடன்,  நடிகர்களின் நூறாவது படம் சரியாக ஓடாது என்ற நம்பிக்கையை தகர்த்தெறிந்தது.

இதனைத் தொடர்ந்து 1993-ல் சக்கரைத் தேவன், 1998-ல் உளவுத்துறை என ஆகிய படங்களில் ஐ.வி.சினி புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் திரைப்படங்களில் விஜயகாந்த் நடித்திருந்தார். 90-களின் பிற்பகுதியில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் அவர் இருந்தார். விஜயகாந்தின் திருமணத்திற்கு பிறகு விஜயகாந்த் – ராவுத்தர் நட்பில்  கொஞ்சம் கொஞ்சமாக விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விஜயகாந்தின் சில அரசியல் நகர்வுகள் ராவுத்தருக்கு பிடிக்காமல் போகவே அங்கும் சில விரிசல்கள் ஏற்பட, ஒரு கட்டத்தில் அவர்கள் நட்பு முற்றிலுமாக முடிவுக்கு வந்தது. இப்ராகிம் ராவுத்தர் ஒரு கட்டத்தில் அதிமுகவில் இணைந்தார். எனினும் இறுதிவரை தூரமாக இருந்து ஒருவர் மற்றொருவரின் வளர்ச்சியை கொண்டாடியே வந்தனர். 2015ம் ஆண்டு ராவுத்தர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, விஜயகாந்த் அடிக்கடி நேரில் சென்று சந்தித்து வந்தார். சுயநினைவு இழந்து இப்ராகிம் ராவுத்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கும் விஜயகாந்துக்கும் இடையிலான நட்பு குறித்த கடிதம் ஒன்றை விஜயகாந்த் எழுதியிருந்தார்.

அக்கடித்ததில் “நண்பா, நீ உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாய் என்ற செய்தி கேட்டு வேதனையுடன் உன்னை உடல் நலம் விசாரிக்க வந்தேன். அங்கு நீ சுயநினைவு கூட இல்லாத நிலையில் கட்டிலில் இருந்ததை கண்டதும் என் மனம் பட்ட துயரத்தை நான் மட்டுமே அறிவேன்.உன்னை கண்டவுடன் சிறுவயது முதல் நாம் கொண்ட உண்மையான நட்பும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற உறுதியோடு மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து சினிமா உலகில் போராடி நாம் பெற்ற வெற்றி தோல்விகளும் என் கண் முன்னே வந்து சென்றன.

காலத்தின் ஓட்டத்தில் எத்தனையோ மன கஷ்டங்களும், சந்தோஷங்களும் வந்து சென்றிருந்தாலும் என்றுமே உன்னை என் மனம் மறந்ததில்லை. இப்ராகிம் நீ மீண்டும் நல்ல ஆரோக்கியத்தோடு நலம் பெற்று வர வேண்டும் என்று என் பிரார்த்தனையை கடவுளிடத்திலே வைக்கிறேன். நண்பா மீண்டு வா, எழுந்து வா” என்று எழுதியிருந்தார் விஜயகாந்த்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading