கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவித் தொகை வழங்க இயலாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுமீது மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது:
“தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி நிலநடுக்கம் அல்லது மழை,வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவுகள் காரணமாக உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு மட்டுமே நிவாரண உதவி வழங்க முடியும். கொரோனா தொற்று காரணமாக அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இயற்கை பேரிடர் நிவாரண உதவியை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோருக்கும் வழங்குவது சரியானதாக இருக்காது.
சுகாதார செலவினங்கள் அதிகரித்துள்ளதன் காரணமாகவும், குறைந்த வரிவருவாய்காரணமாகவும் பாதிக்கப்பட்டிருக்கும் மாநிலங்கள் லட்சகணக்கான ரூபாய்களை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு இழப்பீடாக வழங்கக் கூடாது.
கொரோனா தொற்று காரணமாக 3.85 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். கொரோனா தொற்றில் உயிரிழந்தோருக்கான இறப்பு சான்றிதழில் கோவிட் காரணமாக மரணம் என்பதை குறிப்பிட வேண்டும். அப்படி குறிப்பிடப்படாத பட்சத்தில் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.”
இவ்வாறு மத்திய அரசின் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது.







