மின்மினிப்பூச்சி, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் வெளிச்சம் தராது. கானல் நீர் தாகம் தீர்க்காது. அது போல் தான் தமிழ்நாடு பட்ஜெட் உள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து, 2023–24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார். இந்த உரையில் பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் மேம்பாட்டுதுறை, சுற்றுச்சூழல் மேம்பாடு என பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின.
பட்ஜெட் வாசிக்க தொடங்கிய போது எதிர்க்கட்சியினர் கூச்சல், குழப்பமிட்டு அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்துள்ளது. என்.எல்.சி. விரிவாக்கத்திற்கு விவசாய நிலத்தை பறிக்கும் செயலை கண்டித்தும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் அமல் படுத்தாதை கண்டித்தும் வெளிநடப்பு செய்தோம் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுக அரசில் மூன்று முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். மின் கட்டணம், சொத்து வரி பால் விலையை உயர்த்தியுள்ளனர். இது தான் திமுக அரசுக்கு மக்கள் அளிக்கும் பரிசு. அதிமுக ஆட்சிக்காலத்தில் தேவையான திட்டங்களை அறிவித்தோம். தேவையான நிதியை அறிவித்தோம். ஆனால் திமுக அரசு திட்டங்களை அறிவிக்கிறதே தவிர நிதியை ஒதுக்குவதில்லை.
பொருளாதாரத்தை பெருக்க அமைக்க பன்னாட்டு குழு எந்த பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அதன் மூலம் வருவாய் எவ்வளவு அதிகரித்துள்ளது என்பதை திமுக அரசு இதுவரை சொல்லவில்லை. நீட் தேர்வு ரகசியத்தை வெளியிட்ட உதயநிதிக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும். மின்மினிப்பூச்சி, நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் வெளிச்சம் தராது. கானல் நீர் தாகம் தீர்க்காது. அதுபோல் தான் தமிழ்நாடு பட்ஜெட் உள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறினார்.