தமிழ்நாடு பட்ஜெட்டில் சென்னையின் வளர்ச்சிக்கான முக்கிய திட்டங்கள்..!

தமிழ்நாடு பட்ஜெட்டில் சென்னைக்கான பல்வேறு முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று அறிவித்தார்.  தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது.…

தமிழ்நாடு பட்ஜெட்டில் சென்னைக்கான பல்வேறு முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று அறிவித்தார். 

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது.

இதையடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார்.

இந்த பட்ஜெட்டில் திமுக தேர்தல் அறிக்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகளில் ஒன்றான, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவது, சென்னை அண்ணாசாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 4 வழி மேம்பாலம் அமைத்தல், முதலமைச்சரின் முக்கிய திட்டமான காலை உணவுத் திட்டத்தை அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவாக்கம செய்தல், சென்னையில் சர்வதேச விளையாட்டு மையம் அமைத்தல் , மகளிர் சுய உதவி குழுக்கள் கடன் உதவி வழங்குதல் , பெண் தொழில் முனைவோருக்கு சிறப்பு திட்டம், உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டார்.

Also Read : 7 மாநகராட்சிகளில் இலவச வைஃபை வசதி; பட்ஜெட்டில் வெளியானது அதிரடி அறிவிப்பு!

இதில் சென்னையின் வளர்ச்சிக்கான பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று அறிவித்துள்ளார். அந்த வகையில், சென்னையில் மறுகுடியிருப்புகளில் வசிக்கும் மக்களின் நலன்களுக்காக கண்ணகி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உடற்பயிற்சி மையங்கள், விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும்.

வடசென்னை வளர்ச்சி திட்டம்:

சென்னையில் சமமான வளர்ச்சியை உறுதி செய்ய வடசென்னை வளர்ச்சித் திட்டம் ஒன்றை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 3 ஆண்டுகளுக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீவுத்திடலில் திறந்தவெளி திரையரங்கம்:

சென்னை தீவுத்திடலில் திறந்தவெளி திரையரங்கம் உள்ளிட்ட பல புதிய வசதிகளை மேற்கொள்ள ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வெள்ளத் தடுப்புத் திட்டம்:

⦁ சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகள் ரூ.434 கோடியில் மேற்கொள்ளப்பட்டு முடியும் தருவாயில் உள்ளன.

அடையாறு, கூவம் சீரமைப்பு:

⦁ அடையாறு , கூவம் பகுதிகளை மறுசீரமைக்க ரூ.1500 கோடி

⦁ வெள்ளம், கனமழையை எதிர்கொள்ளும் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.320 கோடி

சென்னையில் 4 வழிச்சாலை மேம்பாலம்:

⦁ ரூ.521 கோடி மதிப்பில் சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 4 வழிச்சாலை மேம்பாலம் அமைக்கப்படும்.

இலவச வைபை வசதி:

⦁ சென்னை தாம்பரம், கோவை, மதுரை மாநகராட்சிகளில் இலவச வைபை வசதி முதற்கட்டமாக செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.