ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடவில்லை எனவும், எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. முன்னதாக திமுக கூட்டணி சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக எங்கள் தரப்பு போட்டியிடுகிறது. இரட்டை இலை சின்னத்திற்கான முழு உரிமை எங்களுக்கு உள்ளது. இரட்டை இலை சின்னத்திற்காக ஒருங்கிணைப்பாளராக நான் கையெழுத்திடுவேன் என்று கூறினார்.
இந்நிலையில் பாமக சார்பில் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடவும் இல்லை, யாருக்கும் ஆதரவு அளிக்கவும் இல்லை என கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து, பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் உயர்நிலை குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், இடைத்தேர்தல்கள் தேவையற்றவை. மக்களின் வரிப்பணத்தையும், நேரத்தையும் வீணடிப்பவை.
அதனால் சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்த தேவையில்லை. அங்கு பொதுத்தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்றதோ, அதே கட்சியை சேர்ந்த ஒருவரை சட்டமன்ற உறுப்பினராக்கி விடலாம் என்பது தான் பாமகவின் நிலைப்பாடு. அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் பாமக போட்டியிடுவதில்லை. எந்த கட்சிக்கும் ஆதரவு அளிப்பதில்லை என்று கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.