கச்சத் தீவில் புத்தர் சிலை – அன்பின் அடையாளமா? ஆக்கிரமிப்பின் சின்னமா?

இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டாலும் கச்சத் தீவு இந்தியாவின் பகுதியாக இப்போதும் பலரால் பார்க்கப்படுகிறது. புத்தர் சிலையால் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. கச்சத் தீவு குறித்து தொடரும் சர்ச்சைகளுக்கு காரணம் என்ன? தீர்வுதான் என்ன ?…

இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டாலும் கச்சத் தீவு இந்தியாவின் பகுதியாக இப்போதும் பலரால் பார்க்கப்படுகிறது. புத்தர் சிலையால் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. கச்சத் தீவு குறித்து தொடரும் சர்ச்சைகளுக்கு காரணம் என்ன? தீர்வுதான் என்ன ? விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவின் தென்கிழக்குக் கடற்கரைக்கும் இலங்கையின் வடக்கு கடற்கரைக்கும் இடைப்பட்ட பகுதியே பாக் நீரிணை எனப்படுகிறது. பவளப் பாறைகள், மணல் திட்டுகள் அதிகம் உள்ள இந்த பகுதிக்கு 1,755 – 1,763 வரை சென்னை மாகாணத்தின் ஆளுநராக இருந்த ராபர்ட் பாக்-கின் பெயரைத்தான் இந்த பகுதிக்கு வைத்துள்ளனர். இதில், தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும் யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவிலிருந்து 10.5 மைல் தொலைவில் சுமார் 285 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குட்டித் தீவுதான் கச்சத் தீவு.

கடந்த 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த சீனிக்குப்பன் என்பவர் புனித அந்தோணியார் ஆலத்தை கட்டியதாகவும் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பாதிரியார் பூசை வைப்பார் என்றும் அரசு ஆவணங்களில் உள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது, பிரிட்டிஷார் இந்தத் தீவை, வெடிகுண்டுகளை வெடித்துப் பயிற்சி பெற்றுள்ளதாகவும் தகவல்கள் உள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு பகுதி

இந்த தீவு ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு உரிமையானதாக இருந்தது. தீவைச் சுற்றி மீன் பிடிக்கும் உரிமை, தீவில் மேய்ச்சல் உரிமை, பிற வேலைகளுக்கு பயன்படுத்துவது உள்ளிட்ட உரிமைகள் ராமநாதபுரம் மன்னர் குத்தகைக்கு விட்டிருந்தார். இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளையும் ஆட்சி செய்த பிரிட்டிஷ் அரசு கச்சத்தீவை இந்தியாவின் ஒரு பகுதியாக அங்கீகரித்தது.

சுதந்திரத்திற்கு பின்னர் 1948ம் ஆண்டு ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டதையடுத்து, கச்சத்தீவு அப்போதைய சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியானது. தொடர்ந்து, 1972ல் தமிழ்நாடு அரசால் பதிப்பிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட கெஸட்டியர், கச்சத்தீவை ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக சொல்கிறது.

நூறாண்டு முன்பு தொடங்கிய வாதம்

கச்சத்தீவு யாருக்குச் சொந்தம் என்கிற பிரச்னை 1920களிலேயே துவங்கிவிட்டது. பாக் நீரிணை – மன்னார் வளைகுடா பகுதிகளில் எல்லையை வரையறுப்பதற்காக 1921 அக்டோபர் 24ம் தேதி கொழும்பு நகரில் சென்னை மாகாண அதிகாரிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், ’’கச்சத் தீவு இலங்கைக்கு கிடைக்கும்படி எல்லையை வகுக்க வேண்டும். இல்லாவிட்டால் மாநாட்டை நிறுத்திவிடலாம்’’ என்றார் இலங்கை அதிகாரி ஒருவர். இதை இந்திய குழு ஏற்கவில்லை. மாறாக, அந்தப் பகுதியின் மீன்பிடி உரிமையை மட்டும் தருவதாகச் சொன்னது. ஒப்பந்தமும் கையெழுத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை காலனி அலுவலகம் ஏற்கவில்லை. ஆகையால், சட்டரீதியாக இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரவில்லை.

அடுத்தடுத்த ஒப்பந்தங்கள்

ஆனாலும் கச்சத் தீவு குறித்த விவாதத்தை தங்களுக்கு கோருவதை இலங்கை தொடர்ந்தது. இந்திய அரசு இலங்கைக்கு கொடுத்து விடும் என்கிற அறிகுறிகள் தெரிந்ததும், ராமநாதபுரம் ஜமீனின் ஆவணங்களைக் காட்டி ’’கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம் என்றது தமிழ்நாடு அரசு. அரசியல் தலைவர்களும் இதையே வலியுறுத்தினர். ஆனாலும் 1974 ஜூன் 28ஆம் தேதி இந்திய அரசும் இலங்கை அரசும் செய்த ஒப்பந்தம் செய்தன. இந்த ஒப்பந்தப்படி, பாக் நீரிணையில் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைக்கோடு வரையறுக்கப்பட்டது.

கச்சத் தீவு இலங்கைக்குச் செல்லும்படி இந்தக் கோடு வரையறுக்கப்பட்டது. இந்திய நாடாளுமன்ற மக்களவையில், அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்வரண் சிங் கூறுகையில், “இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருப்பதன் மூலம் கடந்த காலத்தில் இரு தரப்பினரும் அனுபவித்தது போலவே மீன் பிடிக்கும் உரிமை, கப்பல்களைச் செலுத்தும் உரிமை, யாத்திரை செல்லும் உரிமை ஆகியவை எதிர்காலத்திலும் தொடரும்” என்றார். ஆனாலும், இந்த ஒப்பந்தத்திற்கு அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். குறிப்பாக ‘’இந்த ஒப்பந்தம் மாநில அரசின் உரிமைகளை கடுமையாக பாதிக்கிறது. ஒப்பநத்தத்தின் ஷரத்துகளை மாநில அரசுடன் மத்திய அரசு விவாதிக்கக்கூட முன்வரவில்லை’’ என்றார் என்கிறார்கள்.

கச்சத் தீவை மீட்க கோரிக்கை

ஆனாலும் 1976ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மற்றுமொரு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த இரண்டாவது ஒப்பந்தத்தின்படி, “இந்திய மீனவர்களும் அவர்களது மீன் பிடிப் படகுகளும் இலங்கைக் கடல் பகுதியிலும் இலங்கையின் பிரத்யேக பொருளாதார மண்டலப் பகுதியிலும் இலங்கையின் அனுமதியில்லாமல் மீன்டிபிடிக்க மாட்டார்கள்” என்றது. இந்த 2 ஒப்பந்தங்களால், கச்சத் தீவு முற்றிலும் இலங்கைக்கு என்று உறுதியானது.

இதையடுத்து, அந்தப் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் இந்திய, தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு, கைது, படகுகளைப் பறிமுதல் தொடர்கிறது. இலங்கை ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டால், உயிரிழந்த இந்திய மீனவர்களின் எண்ணிக்கையும் அதிகம். எனவே, தமிழ்நாட்டின், இந்தியாவின் சொத்தான, கச்சத் தீவை மீட்க வேண்டும். அதுவே இந்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டும் வருகிறது. இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்தியா அந்நாட்டுக்கு பெருமளவு பொருளாதார உதவி செய்துள்ளது. எனவே, 1974-ஆம் ஆண்டு இந்திய தாரை வார்த்த கச்சத் தீவை இந்திய திரும்ப பெற வேண்டும். தற்காலிக முயற்சியாக நீண்ட கால குத்தகைக்கு எடுக்க வேண்டும் என்றும் சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.

அடுத்த சர்ச்சை

மேலும், ’கச்சத் தீவு, இலங்கைக்கு மட்டுமின்றி சீன ராணுவத்திற்கும் தளமாக அமைந்துள்ளதாகவும் இது இந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும்; என்கிறார்கள். இந்நிலையில், கச்சத் தீவில் இலங்கை கடற்படை வீரர்கள் தங்கியுள்ள பகுதியில் 2 புத்தர் சிலைகள் வைக்கப்பட்டு, புத்த விகார் கட்டப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. குறிப்பாக, ‘கச்சத்தீவில் அரச மரம் இல்லாத நிலையில் இலங்கையில் இருந்து அரச மரக் கன்றுகள் கொண்டு சென்று வளர்த்துள்ளனர். அங்கு 3 அடி உயர சிலையுடன் ஒன்று, 5 அடி உயர சிலையுடன் ஒன்று என 2 புத்த விகார் கட்டப்பட்டுள்ளது’ என்கிறார் நெடுந்தீவு பங்குத் தந்தை வசந்தன். அவர் சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். ஆனால், ’கச்சத் தீவில் புத்தர் சிலையை வைக்கவில்லை, விகாரும் கட்டவில்லை’ என்று இலங்கை கடற்படை மறுத்துள்ளது.

’உண்மையான பவுத்தம் எங்க நாட்டில் இருந்திருந்தால் தமிழர்கள் ஆயுதம் ஏந்தியிருக்க மாட்டார்கள். சிங்கள பவுத்த பேரினவாதத்தால் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள்.’என்கிறார்கள் ஈழத் தமிழர்கள். அதுமட்டுமின்றி, ‘இலங்கையில் 2009-ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்த பிறகு வடக்கு, கிழக்கு பகுதியில் புத்த விகாரங்களை அமைத்து, சிங்களமயமாக்கும் பணிகளை ராணுவம் செய்து வருகிறது. புத்த விகாரங்கள் ஆக்கிரமிப்புச் சின்னங்களாக உள்ளன’ என்கிற குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.

இந்நிலையில், ’இந்தியா கொடுத்த கச்சத் தீவில் இருநாட்டு உறவு, நல்லிணக்க அடையாளமாக உள்ள அந்தோணியார் ஆலயம் உள்ள பகுதியில் புத்தர் சிலையை வைக்கின்றனர். இது இரு நாட்டு உறவிலும் பாதிப்பை ஏற்படுத்தும்’ என்கிறார்கள் இரு நாட்டு பங்கு தந்தைகள். கச்சத் தீவில் புத்தர் சிலை அன்பின் அடையாளமா? ஆக்கிரப்பின் சின்னமா? என்கிற கேள்வியை எழுப்பியுள்ளனர்.

இது குறித்து நியூஸ் 7 தமிழின் சொல் தெரிந்து சொல் பகுதியில் வெளியான காணொளியைக் காண..

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.