என்.சி.எல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில், ஶ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி 68 ரன்கள் வித்தியாசத்தில் கற்பகம் பல்கலைக்கழக அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
செய்தித் தொலைக்காட்சி வரலாற்றில் முதல்முறையாக, நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளுக்கு இடையேயான NCL 2023 (NEWS 7 TAMIL CRICKET LEAGUE 2023) டி20 கிரிக்கெட் தொடரின் முதல் சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இத்தொடர் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கோவை, திருச்சி, மதுரை மற்றும் நெல்லை ஆகிய 4 மண்டலங்களில் இருந்து தலா 8 அணிகள் வீதம் 32 அணிகள் இந்த டி-20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இதையும் படியுங்கள் : NCL 2023 : பி.டி.எம் கல்லூரியை வீழ்த்தி கே.எல்.என் பொறியியல் கல்லூரி வெற்றி
அந்த வகையில், கோவை மண்டலத்தில் முன்னதாக நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில், பொள்ளாச்சி PA பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கோவை சுகுணா பொறியியல் கல்லூரி அணி வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.
இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில், கோவை ஶ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கற்பகம் பல்கலைகழக அணியுடன் மோதியது. இதில் டாஸ் வென்ற கற்பகம் பல்கலைகழக அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஶ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ராமகிருஷ்ணா கல்லூரியின் அஜிதேஷ் 28 பந்துகளில் 60 ரன்கள் விளாசினார்.
இதையடுத்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கற்பகம் பல்கலைக்கழகம் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 98 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஶ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் அஜிதேஷ்-க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.







