ஆம்புலன்ஸ் கிடைக்காததால் உயிரிழந்த சகோதரியின் உடலை சுமார் 5 கி.மீ தொலைவு தோளில் சகோதர்கள் சுமந்து சென்றனர்.
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பருவமழை பெய்து வருகிறது. அந்த வகையில் உத்தரப் பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி மின்வசதி இன்றி நாட்டின் பல பகுதிகளில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் உ.பி-யில் லக்கிம்பூர்கேரி மாவட்டத்தில் ஷிவானி என்ற இளம்பெண் டைபெய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து ஷிவானியை அவரது சகோதர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஷிவானி உயிரிழந்தார்.
இதனால் ஷிவானியின் சகோதரர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர். உயிரிழந்த ஷிவானியின் உடலை கொண்டுச் செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காததால் அவரது சகோதர்கள் இருவரும் ஷிவானியின் உடலை மாறி மாறி தோளில் சுமந்து சென்றனர்.
அவர்களின் வீட்டிற்கு செல்லும் வழிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் தண்டவாளம் அமைந்திருக்கும் பாதை வழியாக சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ள தங்களது வீட்டிற்கு தனது சகோதரியின் உடலை சுமந்து சென்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.







