முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

காலை சிற்றுண்டி திட்டம் சோவியத் மாடல் முதல் ஸ்டாலின் மாடல் வரை


மரிய ரீகன் சாமிக்கண்ணு

கட்டுரையாளர்

அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி என்ற திட்டத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் இன்று (07.05.2022) அறிவித்து இந்திய சமூக-பொருளாதார பக்கத்தின் வரலாற்று அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். ஸ்டாலின் அரசு தனது முதல் ஆண்டை நிறைவு செய்து இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதில், பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான். ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ள அரசு பள்ளியில் பயிலும் 1-5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ – மாணவிகளுக்கு சிற்றுண்டி திட்டம் ஒரு முன்மாதிரி திட்டமாக எதிர்காலத்தில் இந்திய அளவில் உருவெடுக்க வாய்ப்பு உள்ளது.

முதல் கட்டமாக இத்திட்டம் சில மாநகராட்சிகளிலும் தொலைதூர கிராமப்புறங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது. Skills of excellence டெல்லியில் உள்ளது போல் தமிழகம் முழுவதும் “தகைசால் பள்ளி” யாக மேம்படுத்தப்படும். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டம் செயல்படுத்தப்படும் என்ற முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவிப்புகள் தனித்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட வேண்டியுள்ளது.

சிற்றுண்டி திட்டம்: குழந்தை தொழிலாளர்களை ஒழிக்கும்

தமிழ்நாட்டில் கொரோனா முதல் மற்றும் இரண்டு அலைகள் உக்கிரமாக வீசிய காலக்கட்டத்தில் கடுமையான பொருளாதார சரிவை பல குடும்பங்கள் நேரடியாகவே சந்தித்தன. மாத வருமானம் இல்லாமல் பலர் தங்களின் தொழிலை விட்டே வேறு தொழிலுக்கு மாற வேண்டிய அவலமும் இருந்தது. இதன் எதிரொலி நேரடியாக பள்ளி மாணவ மாணவிகளையே பாதித்தது. அதாவது, பல குடும்பங்கள் சந்தித்த பொருளாதார நெருக்கடி, தனியார் பள்ளியில் படித்த மாணவ மாணவிகளை அரசு பள்ளியை நோக்கி நகர்த்தியது. 2021-2022 கல்வி ஆண்டில் அரசு பள்ளி மாணவர்களின் மாணவர் சேர்க்கை இரண்டு மடங்காக அதிகரித்தது.

இது ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம், பள்ளி இடைநிற்றல், குழந்தை தொழிலாளர்கள் முறை அதிகரித்து வறுமை குழந்தைகளின் வாழ்க்கையை வேட்டையாடியது. கொரோனா பேரிடர் காலத்தில் மட்டும், தமிழ்நாட்டின் 13 சதவிகிதம் மாணவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாக மாறினர். இதில், 60 சதவிகிதம் பேர், 200 ரூபாய் சம்பளத்திற்காக 12 மணி நேரத்திற்கும் மேலாக கடுமையாக உழைத்து குடும்ப வறுமையையும், அன்றாடம் தங்களின் உணவு தேவையையும் உறுதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெற்றோர்களுக்கு வேலை இல்லாததால் பள்ளி கட்டணத்தை கட்ட முடியாமல் இடை நிற்றலும் அதிகரித்தது. 11 சதவிகிதம் மாணவ மாணவிகள் பள்ளியை விட்டு வெறியேறினர். அவர்களின் பள்ளி கல்வியே கேள்விக்குறியானது.

பல குடும்பங்களின் பொருளாதார நெருக்கடி தலைவிரித்தாடும் நிலையில் காலை சிற்றுண்டி என்ற தமிழ்நாடு அரசின் திட்டத்தை திறந்த மனத்துடன் பாராட்டவும் வரவேற்கவும் கடமை பட்டுள்ளோம்.

பொருளாதார நெருக்கடியால் பல குடும்பங்களில் காலை சிற்றுண்டி என்பதே கனவாய் மாறிப்போய் உள்ளது. ஊட்டச்சத்து இல்லாத தமிழகத்தை உருவாக்கும் திட்டம் தமிழ்நாடு அரசுக்கு உள்ளது என்ற முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவிப்பை இதன் பின்னணியில் பார்த்தால் மாணவ மாணவிகள் இன்னும் கவனத்துடன் படிக்கும் சூழலை அரசு அவர்களுக்கு உறுதி செய்துள்ளது.

காலை சிற்றுண்டி முன்மாதிரி திட்டம்:

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள காலை சிற்றுண்டி திட்டம் போலவே ஏற்கனவே, புதுச்சேரியில் 2020-21 ஆம் ஆண்டு முதல் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி காலைச் சிற்றுண்டி திட்டம் என்ற பெயரில் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் காலை சிற்றுண்டி திட்டம் சத்துணவு திட்டத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சியாக உருவெடுத்துள்ளது.


சமூகத்தில் சாதியின் பெயரால் கல்வி மறுக்கப்பட்ட குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களுக்கு வரவழைப்பதற்காகவும் கல்வி அளித்து அவர்களை முன்னேற்றும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது சத்துணவுத் திட்டம். இந்தியாவுக்கே முன்னோடியான இந்த மதிய உணவுத் திட்டத்தின் வரலாறு, தமிழ்நாட்டில் ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. இந்தத் திட்டத்திற்கான முன்னோடிகளாக விளங்கியது நீதிக்கட்சி. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 1925ஆம் ஆண்டு, இந்தத் திட்டத்தை அமல்படுத்தினார் சிங்காரவேலர். காமராஜர் ஆட்சிக் காலத்தில் கல்வித்துறை செயலாளராக இருந்த சுந்தரவடிவேலு சோவியத் யூனியனிற்கு சென்று பல கட்ட கள ஆய்வுகளுக்கு பிறகு முன்னாள் முதலமைச்சர் காமராஜரிடம் ஒரு அறிக்கையை சமர்பித்தார். சோவியத் யூனியன் மாடலை மையமாக வைத்து மதிய உணவுத் திட்டத்தை காமராஜர் நடைமுறைப்படுத்தினார். 1982-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் சத்துணவுத் திட்டம் தனித்துறையாக செயல்படத் தொடங்கியது.

பின்னாள்களில் கருணாநிதி ஆட்சிக் காலத்தில், இந்தத் திட்டத்தில் முட்டை சேர்த்துக் கொள்ளப்பட்டது. ஜெயலலிதாவின் ஆட்சியில், கலவை சாதமாகவும், முட்டையில் வெவ்வேறு வகை உணவாகவும் இது மாற்றம் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் கல்வி மேம்பாட்டிற்கு ஒருவகையில் இந்த சத்துணவுத் திட்டம் மிகவும் இன்றியமையாத ஒன்றாக மாறியதை காலம் மறுக்காது.

ஏற்கனவே, குழந்தைகளின் கற்றல் திறன் குறைந்தும், பள்ளி இடைநிற்றல் என்பது அதிகரித்தும் இருக்கும் சூழலில் காலை சிற்றுண்டி திட்டம் பல வகையில் குழந்தைகளின் எதிர்காலத்தை ஆரோக்கியமானதாக மாற்ற வாய்ப்பு உள்ளது.

சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தும் காலை சிற்றுண்டி திட்டம்:

காலை சிற்றுண்டி திட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தும் பட்சத்தில், தமிழ்நாட்டின் உணவு தானிய உற்பத்தியானது அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதே போல, விவசாயிகளின் பொருளாதாரமும் உயரும். விவசாயிகள் விளைவிக்கும் தானியங்களை நேரடியாக அரசே கொள்முதல் செய்தால் விவசாயிகள் நேரடியாக பலன் அடைவார்கள். ஏற்கனவே, கொரோனா காலக்கட்டத்திலும், ஆதார விலை கிடைக்காமலும் அவதிப்படும் விவசாயிகள் இதன் மூலமாக மிகந்த நன்மை அடைவார்கள்.
அரசு கவனிக்க வேண்டியது என்ன?

இது போன்ற திட்டங்களை செயல்படுத்தும் பொழுது விவசாயிகளிடம் இருந்து நேரடியாக தானியங்களை கொள்முதல் செய்ய வேண்டும். இதனால், கொள்முதல் அதிகரித்து தரகர்கள், பெருமுதலாளிகளின் மூலமாக வாங்குவது தவிர்க்கப்பட வேண்டும். ஏற்கனவே, அரசு முட்டைக் கொள்முதல் உள்ளிட்ட சில திட்டங்களில் குறிப்பிட்ட பெரு முதலாளிகள் மட்டுமே ஆதாயம் அடைவதாக விமர்சனம் இருக்கும் போது, இதனை விவசாயிகள் நேரடியாக பலன் அடையும் வகையில் தமிழ்நாடு அரசு திட்டங்களை வகுத்தால், பல தரப்பினருக்கும் பலன் அளிக்கும் திட்டமாக மாறும்.

அதே போல, ஏற்கனவே, சத்துணவு திட்ட துறையில் ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதாக கூறப்படுகிறது. ஊழியர்கள் இல்லாமல் காலை சிற்றுண்டி திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் கூடுதல் சுமை ஊழியர்கள் மீது விழும். அதனைத் தவிர்க்க, கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டிய பொறுப்பும் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
அரசிடம் கல்வி என்பது உறுதியாகும்:

இந்தியாவில் ஒப்பீட்டளவில் முன் மாதிரியாக உள்ளது இந்த காலை சிற்றுண்டி திட்டம். அந்த வகையில் பள்ளி கல்வி சேர்க்கையை விரிவாக்கும். அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும். பெருமளவு மாணவர்கள் அரசு பள்ளியை நாடி வரும் சூழலில் இது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால் கல்வி என்பது அரசிடம் இருக்கும் என்பது திடப்படும். ஒடுக்கப்பட்ட பின்னணியில் இருக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிற்றுண்டி அளிக்க வேண்டும் என்ற கவலையில் இருந்து நிம்மதியாகி அவர்களின் கூடுதல் சுமையை குறைக்கிறது இந்த காலை சிற்றுண்டி திட்டம்.

Advertisement:
SHARE

Related posts

எம்.ஜி.ஆருக்கே ஆலோசனை கூறியதாக சசிகலா கூறுவதை அதிமுக தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் – சி.வி.சண்முகம்

Jeba Arul Robinson

தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவியேற்பு!

Halley Karthik

ரஷ்யாவின் 7 விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் தகவல்

Arivazhagan CM