பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரில் குடியிருப்புப் பகுதியில் பதுங்கி இருந்த 10 அடி நீள பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் நேற்றிரவு முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. மேலும், சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. இன்றும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : #TNrains | 14 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
இதற்கிடையே, செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்துள்ள பொழிச்சலூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை பின்புறம் உள்ள ஞானமணி நகர் 6-வது தெருவில் மழைநீரில் அடித்து வரப்பட்ட பெரிய மலைப் பாம்பு ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள குடியிருப்பு மக்கள் மிகவும் அச்சமடைந்தனர்.
உடனடியாக அப்பகுதி குடியிருப்பு மக்கள் தாம்பரம் தீயணைப்பு துறை மற்றும் கிண்டி வனத்துறையினருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து தாம்பரம் தீயணைப்பு துறையினர் மற்றும் கிண்டி வனத்துறையினர் குடியிருப்பு பகுதிக்குள் தஞ்சமடைந்த மலைப்பாம்பை சுமார் 30 நிமிடம் போராடி பிடித்து சென்றனர். மலைப்பாம்பை பிடித்துச் சென்றவுடன் அப்பகுதி குடியிருக்கும் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.







