பாலிவுட்டின் பாட்ஷா என்ற கொண்டாடப்படும் நடிகர் ஷாருக்கான் திரை உலகிற்கு வந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த மைல்கல்லை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தொலைக்காட்சியில் இருந்து சினிமாவிற்கு வந்து முன்னணி கதாநாயகனாக உருவாகி, பல சாதனைகளை படைத்தது வருகிறார் சிவகார்த்திகேயன். இவருக்கு முன்னோடியாக 30 ஆண்டுகளுக்கு முன்பே தொலைக்காட்சி தொடர் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஷாருக்கான். 1988ம் ஆண்டு டிவி நடிகராக நடிப்புத் துறைக்கு அறிமுகமான ஷாருக்கான், 1992ம் ஆண்டு தீவானா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டிற்கு எண்ட்ரி கொடுத்தார்.
திரைத்துறைக்கு எண்ட்ரியான ஆண்டே சிறந்த புதுமுக நடிகருக்கான film fare விருதை பெற்று பலரையும் வியக்க வைத்தார். இன்று பாலிவுட்டின் மாஸ் கமர்ஷியல் ஹீரோவாக திகழும் அவர், தொடக்க காலங்களில் காதல் படங்களில் அதிகமாக நடித்து பாலிவுட்டின் சாக்லேட் ஹீரோவாகவே அறியப்பட்டார்.
பின்னர் சிறிது சறுக்கலை சந்தித்த அவரது திரைப்பயணம் 2003ம் ஆண்டிற்கு பிறகு சரவெடியாக வெடிக்க தொடங்கியது. சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய ஷாருக்கான், பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்து பாலிவுட்டின் கிங் கான் என்ற அரியணையில் அமர்ந்தார்.
ஹிந்தி சினிமா மட்டுமின்றி இந்தியா முழுமைக்கும் அறியக்கூடிய மாபெரும் நட்சத்திரமாக மாறினார் ஷாருக்கான். தமிழிலும் மாபெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2018ம் ஆண்டு வெளியான ஜீரோ படமே கடைசியாக அவர் நடிப்பில் வெளிவந்த படமாக உள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரியில் “பதான்” படம் வெளிவர இருக்கிறது. இதைத்தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ‘ஜவான்’ படம் வெளியாக உள்ளது.
ஷாருக்கான் தனது 30 வருட திரையுலகப் பயணத்தைச் சிறப்பிக்கும் விதமாக ‘பதான்’ படத்தின் புதிய மோஷன் போஸ்டரை வெளியிட்டு, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
-சந்தோஷ்








